பிகாரில் இன்று சரத் யாதவ் அணி மாநாடு

ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) அதிருப்தி தலைவர் சரத் யாதவ் தலைமையில், அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கும் மாநாடு பிகார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) அதிருப்தி தலைவர் சரத் யாதவ் தலைமையில், அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கும் மாநாடு பிகார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
நிதீஷ் குமாரிடம் இருந்து விலகிய பிறகு பிகாரில் சரத் யாதவ் நடத்தும் முதல் மாநாடு இது என்பதால், அவரது பலத்தை வெளிக்காட்டும் களமாகவே அதை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
தில்லியில் இரு நாள்களுக்கு முன்பு சரத் யாதவ் நடத்திய பொதுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்பட 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது இந்த ஆதரவாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார். கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்த அவர், பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தார். அண்மையில் மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதல்வராக நிதீஷும், துணை முதல்வராக பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியும் பதவியேற்றுக் கொண்டனர்.
அதற்கு அடுத்த சில நாள்களில் பிகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் உள்பட புதிதாக 27 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதனிடையே, சரத் யாதவிடம் இருந்த ஜேடியு மாநிலங்களவை தலைவர் பதவியை நிதீஷ் பறித்தார். இந்த சூழலில் நிதீஷுக்கு எதிராக அணி திரட்டும் நடவடிக்கைகளில் சரத் யாதவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சித் தலைவர்களையும் தனது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது ஜேடியு சரத் யாதவ் அணி மாநாடு பாட்னாவில் நடத்தப்படவுள்ளது. அதில் திரளப் போகும் கூட்டத்தை வைத்தே அரசியல் அரங்கில் சரத் யாதவுக்கு உள்ள பலம் என்ன என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com