பிகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 170-ஆக அதிகரிப்பு

பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்
பிகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 170-ஆக அதிகரிப்பு

லக்னோ: பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிகாரில் மட்டும் வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது.

பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு மாதக்காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அந்த மாநிலங்களில் பாயும் பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிகாரைப் பொருத்தவரை, அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக, அராரியா, மேற்கு சம்பாரன், சீதாமர்கி, மதுபானி உள்ளிட்ட 18 மாவட்டங்களை வெள்ளம் முழுமையாக சூழ்ந்துள்ளது. இதனால் அந்த 18 மாவட்டங்களும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டன. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்  98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு இதுவரை மட்டும் 170 பேர் பலியாகிவிட்டனர். அராரியா மாவட்டத்தில் 23 பேரும், சீதாமர்கி (12), கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன் மற்றும் சப்யூலில் தலா 11 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 11 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 114 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 3.92 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மதுபாணி மாவட்டம் கோபால்கஞ்ச் நகரில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் நேற்று படகில் மீட்டு வந்த கர்ப்பிணி பெண் ஒருவருகில் அந்த படகில் அழகான குழந்தை பிறந்தது.

இதேபோல், உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மழையால் பாதிப்பு அடைந்தவர்களை பத்திரமாக மீட்டு வருகிறோம். பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com