பிகாரில் வெள்ளம்: பலி 202-ஆக உயர்வு: 1.21 கோடி பேர் பாதிப்பு

பிகாரில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202-ஆக அதிகரித்துவிட்டது.

பிகாரில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202-ஆக அதிகரித்துவிட்டது.
மாநிலத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 1.21 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிகார் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலத்தில் 17 மாவட்டங்களில் உள்ள 1,688 கிராம ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சமஸ்திபூர் மாவட்டமும் வெள்ளக்காடாக மாறிவிட்டதால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துவிட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4.22 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 1,336 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 118 படகுகளுடன் 1,152 வீரர்களைக் கொண்ட 28 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் வெள்ள மீட்பு நிவாரணம் தொடர்பாக சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குமாறு அவர் உத்தரவிட்டார்.
ஒரு மாத ஊதியத்தை அளித்த எம்.பி.க்கள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், ஒரு மாத சம்பளமான ரூ.50ஆயிரத்துக்கான காசோலையை பிகாரைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் எம்.பி. ராம் குமார் சர்மாவும் முதல்வரிடம் அளித்தனர்.
இதேபோல், எம்எல்ஏ சுதான்ஷு சேகரும், சட்ட மேலவை உறுப்பினர் சஞ்சீவ் ஷியாம் சிங்கும் தலா ரூ.30ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.
ரயில் சேவை பாதிப்பு: இதற்கிடையே, பிகாரிலும், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில் சேவை வரும் 28-ஆம் தேதிக்குள் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com