முடிந்தால் கட்சியை உடைத்து காட்டுங்கள்: நிதீஷ் குமார் சவால்

"உங்களுக்கு துணிவு இருந்தால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைத்து காட்டுங்கள்' என்று அதிருப்தி அணியினருக்கு, பிகார் முதல்வரும் அந்த கட்சியின் தேசியத் தலைவருமான நிதீஷ் குமார் சவால் விடுத்துள்ளார்.
முடிந்தால் கட்சியை உடைத்து காட்டுங்கள்: நிதீஷ் குமார் சவால்

"உங்களுக்கு துணிவு இருந்தால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைத்து காட்டுங்கள்' என்று அதிருப்தி அணியினருக்கு, பிகார் முதல்வரும் அந்த கட்சியின் தேசியத் தலைவருமான நிதீஷ் குமார் சவால் விடுத்துள்ளார். மேலும், கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ், தனது எதிர்கால முடிவை சுதந்திரமாக எடுக்கலாம் என்றும் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
பிகார் மாநிலம், பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்பின்னர், கட்சித் தொண்டர்கள் மத்தியில் நிதீஷ் குமார் பேசினார். அப்போது, சரத் யாதவை விமர்சித்த நிதீஷ், "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கடந்த 2013-ஆம் ஆண்டில் விலகியபோது, நீங்கள் (சரத் யாதவ்) எதுவும் பேசவில்லை. இப்போது மட்டும் கட்சி முடிவை எதிர்ப்பது ஏன்? உங்களது எதிர்கால முடிவை நீங்கள் சுதந்திரமாக எடுக்கலாம்' என்றார். அத்துடன், சரத் யாதவுக்கு தான் அளித்து வந்த ஒத்துழைப்பு, அரசியல் மரியாதை குறித்து நிதீஷ் யாதவ் பேசினார்.
மேலும், சரத் யாதவின் ஆதரவாளர்களுக்கு சவால் விடுத்த நிதீஷ், "உங்களுக்கு துணிவு இருந்தால், கட்சியை உடைத்துக் காட்டுங்கள்; கட்சியில் மூன்றில் இருபங்கு ஆதரவு உங்களுக்கு உள்ளதா? என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட நீங்கள் இருக்க முடியாது' என்று எச்சரித்தார்.
ஆர்ஜேடி மீது தாக்கு: கூட்டணி முறிந்த பிறகு, தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி மீது நிதீஷ் குமார் சாடினார்.
"பிகார் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே மகா கூட்டணி அமைக்கப்பட்டது. ஒரு குடும்பத்தை மட்டும் வளமாக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்கள் செய்யும் பாவங்களை நாங்கள் சுமக்க முடியாது.
ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்கு வங்கி குறித்து ஆர்ஜேடி கேள்வியெழுப்பியுள்ளது. பிகாரை பொருத்தவரை, எங்கள் கட்சியுடன் இருப்பவர்கள்தான் வெற்றி பெற முடியும். ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்கு வங்கியால்தான், ஆர்ஜேடி கட்சிக்கு அதிக எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இனி அந்த கட்சிக்கு எதிர்காலம் இல்லை' என்றார் நிதீஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com