173 பசுக்கள் உயிரிழந்த சம்பவம்: சத்தீஸ்கர் அரசு அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 3 கோசாலைகளில் 173 பசுக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 9 அதிகாரிகளை அந்த மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 3 கோசாலைகளில் 173 பசுக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 9 அதிகாரிகளை அந்த மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர்களில், சத்தீஸ்கர் கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குநர்கள் 2 பேரும் அடங்குவர்.
வீமதாரா மாவட்டம் ரானோ, காட்மார்ரா கிராமங்களில் உள்ள 2 கோசாலைகளில் 121 பசுக்களும், துர்கா மாவட்டம், ராய்ப்பூர் கிராமத்தில் உள்ள கோசாலையில் 52 பசுக்களும் கடந்த ஒரு வாரத்தில் பரிதாபமாக இறந்தன. இந்த 3 கோசாலைகளில், உள்ளூர் பாஜக நிர்வாகி ஹரீஷ் வர்மாவின் கோசாலையும் ஒன்றாகும். இந்தத் தகவலை சத்தீஸ்கர் ராஜ்ய பசு சேவை அமைப்பின் தலைவர் வீசேசுவர் படேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், பசுக்கள் உயிரிழந்த விவகாரத்தில் கடமைகளை செய்வதில் கவனக்குறைவுடன் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி, 9 அதிகாரிகளை அந்த மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மாநில விவசாய மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் விரிஜ்மோகன் அகர்வால் இஸ்ரேலில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், மாநில கால்நடைத் துறை இயக்குநர் எஸ்.கே. பாண்டேயிடம் கேட்டார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், அரசு அதிகாரிகள் 9 பேரை அவர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் இருவர், கால்நடை மருத்துவ துறை இணை இயக்குநர்கள் ஆவர். எஞ்சிய 7 பேரும் கால்நடைத் துறை மருத்துவர்கள் ஆவர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பசு சேவை அமைப்பின் செயலரிடம் விளக்கம் கேட்டும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல், மாநிலம் முழுவதும் இருக்கும் கோசாலைகளின் தற்போதைய நிலவரம் குறித்து 3 நாள்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் விரிஜ்மோகன் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார் என்று மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com