5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கக் கூடாது: மோடி

அரசு சார்பில் தங்குவதற்கு வசதி செய்து தரப்படும் நிலையில், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடக் கூடாது என்று தனது அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கக் கூடாது: மோடி

அரசு சார்பில் தங்குவதற்கு வசதி செய்து தரப்படும் நிலையில், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது போன்ற ஆடம்பரங்களில் ஈடுபடக் கூடாது என்று தனது அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்களை மோடி எச்சரித்துள்ளார்.
அவரது தலைமையில் கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி தனிப்பட்ட முறையில் அமைச்சர்களுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
முக்கியமாக, மத்திய அமைச்சர்கள் அலுவல்ரீதியாக வெளியூர்களுக்குச் செல்லும்போது அரசு சார்பில் தங்குவதற்கு இடவசதி அளிக்கப்படும் நிலையில், அதனைத் தவிர்த்து விட்டு 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதை சில அமைச்சர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளது மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக தனது அதிருப்தியை அமைச்சர்களிடம் தெரிவித்த பிரதமர், "அரசுப் பணிக்காக வெளியூர்களுக்கு அமைச்சர்கள் பயணம் செல்லும்போது அவர்கள் தங்குவதற்கு இடவசதி செய்து தரப்படுகிறது. அதனை மட்டுமே அமைச்சர்கள் பயன்படுத்த வேண்டும். அதனைத் தவிர்த்து விட்டு 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது போன்ற ஆடம்பரங்கள் கூடாது. முடிந்த அளவுக்கு பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வசதிகளை அமைச்சர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், "அமைச்சர்களுக்கு அரசு தரும் கார் உள்ளிட்ட சலுகைகளை அவர்களது குடும்பத்தினர் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர்களுக்கு மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்களுக்கு அவர் இதுபோன்று எச்சரிக்கை விடுப்பது இது முதல் முறையல்ல. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் பதவியேற்றபோதும், பாஜக எம்.பி.க்களுக்கு மோடி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
"மக்களவை, மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் வருகைப் பதிவை அமித் ஷா கண்காணிப்பார். பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற அலுவல்கள் அனைத்திலும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அவைக்கு வராமல் இருக்கிறார்கள் என்று புகார் உள்ளது. உங்களையும், என்னையும் விட நமது கட்சிதான் மிகவும் முக்கியமானது' என்று பிரதமர் அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com