கோர்க்கா தலைவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் சனிக்கிழமை நடைபெற்ற 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் விமல் குருங் மீது

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் சனிக்கிழமை நடைபெற்ற 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் விமல் குருங் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அந்த மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டார்ஜீலிங்கின் சௌக்பஜார் பகுதியில் சனிக்கிழமை காலை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. கலிம்போங் பகுதியில் இருக்கும் காவல்நிலையத்தின் மீது கையெறி குண்டு சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வீசப்பட்டது. இதில் அங்கிருந்த ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், காவல்நிலையம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, அவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் குருங் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மேற்கு வங்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மாநில காவல்துறை (சட்டம்-ஒழுங்கு) கூடுதல் டைரக்டர் ஜெனரல் அனுஜ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "குருங் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழும், வெடிப்பொருள்கள் தடை சட்டம், மேற்கு வங்கத்தில் பொது அமைதியை பராமரித்தல் சட்டத்தின் 302ஆவது பிரிவு, ஐபிசி சட்டப்பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்' என்றார்.
இதனிடையே, கலிம்போங்கில் இருக்கும் கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாக அலுவலகம் சனிக்கிழமை இரவு கோர்க்காலாந்து போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களாலும், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் தொடர் கடையடைப்பு போராட்டத்துக்கான அழைப்பினாலும், டார்ஜீலிங்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், கலிம்போங் காவல்நிலையம் மீது கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு கண்டனம் தெரிவித்
துள்ளது.
அந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்; கோர்க்காலாந்து தனிமாநிலம் உருவாக விரும்பாத சக்திகள், இதன்பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்' என்றார்.
அதேபோல், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு குருங் சனிக்கிழமை இரவு கடிதம்
எழுதினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com