பிச்சையெடுக்கும் சிறுவர் மறுவாழ்வுக்குச் சட்டம்: அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தல்

பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிச்சையெடுக்கும் சிறுவர் மறுவாழ்வுக்குச் சட்டம்: அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தல்

பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், தில்லி போன்ற மெட்ரோ நகரங்களிலும் பிச்சையெடுக்கும் தொழிலில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள், போதிய உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பு ஆகியவை இல்லாமல் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
மேலும், அவர்கள் பொருளாதார ரீதியிலும், பாலியல் ரீதியிலும் சுரண்டப்படுகிறார்கள். அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் அல்லது கடத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், 2015-ஆம் ஆண்டைய சிறார் நீதி பாதுகாப்புச் சட்டமானது, பிச்சையெடுக்கும் சிறுவர்களை, அக்கறை காட்டப்பட வேண்டியவர்கள் என்றும், பாதுகாப்பு தேவைப்படுவோர் என்றும் வரையறுத்துள்ளது.
பிச்சையெடுக்கும் சிறுவர்கள், சிறார் நலக் குழு மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் மட்டுமன்றி, அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், இதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில் இதுவரை எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை.
இதனிடையே, 1959-ஆம் ஆண்டில், மகாராஷ்டிரத்தில் இயற்றப்பட்ட பம்பாய் பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டமும், அதைத் தொடர்ந்து தில்லியில் 1960-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டமும், பிச்சையெடுப்பதை குற்றச் செயல் என்று வரையறுத்துள்ளன. இந்தச் சட்டத்தை வைத்தே, பிற மாநிலங்களிலும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இது, சிறார் நீதி பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அம்சங்களுக்கு முரணாக உள்ளது. மேலும், சிறார்களின் உரிமைகளை மீறும் பழங்கால அணுகுமுறையாகவும் உள்ளது. எனவே, சிறுவர்கள் பிச்சையெடுப்பதை முடிவுக்கு கொண்டுவர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com