ரயில் விபத்துக்கு சுரேஷ் பிரபு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ்

உத்கல் ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுதான் பொறுப்பேற்க வேண்டுமென்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
ரயில் விபத்துக்கு சுரேஷ் பிரபு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ்

உத்கல் ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுதான் பொறுப்பேற்க வேண்டுமென்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

ஒடிஸா மாநிலம், புரியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாருக்குச் சென்று கொண்டிருந்த உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப் பிரதேசத்தின், முசாஃபர்நகர் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை திடீரென தடம் புரண்டது. இதில் 14 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. சில ரயில் பெட்டிகள், அருகில் இருந்த வீடுகள் மீதும் விழுந்தன. இதில் அந்த வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துவிட்டனர். 156 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்துக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை உடனடியாக முடிவு செய்யும்படி ரயில்வே வாரியத் தலைவருக்கு அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் மோடி அரசு பதவியேற்ற பிறகு, இதுவரை 27 பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
அவ்விபத்துகளில் 259 பேர் உயிரிழந்துவிட்டனர். 899 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 15 மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 6 பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
தகவல்தொடர்பில் இருந்த குறைபாடுதான் உத்கல் ரயில் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நிர்வாகத்தில் கவனக்குறைவாக செயல்படுவதில் இப்போதைய ரயில்வே அமைச்சகம் புதிய சாதனை படைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
ரயில்வேயில் தனியார்மயமாக்கும் திட்டங்களைத் தொடங்கிவைப்பது, சுட்டுரையில் (டுவிட்டர்) கருத்துகளைப் பதிவிடுவது உள்ளிட்டவற்றில் அமைச்சர் சுரேஷ் பிரபு அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அதே நேரத்தில் ரயில்வே நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பான ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் அவர் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டார்.
ரயில்களில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்கள் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஆனால், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமும், கவனக்குறைவும் 21 பேரின் உயிரைப் பறித்துவிட்டது. எனவே, உத்கல் ரயில் விபத்துக்கு சுரேஷ் பிரபுதான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று தனது அறிக்கையில் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com