டோக்லாம் விவகாரத்தில் விரைவில் தீர்வு

இந்தியா - சீனா இடையேயான டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டோக்லாம் விவகாரத்தில் விரைவில் தீர்வு

இந்தியா - சீனா இடையேயான டோக்லாம் எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் டோக்லாம் பகுதி அமைந்திருக்கிறது. இந்த டோக்லாமின் பெரும்பகுதியானது பூடானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனினும், இந்தியாவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, அந்தப் பகுதியில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், டோக்லாம் பகுதிக்குள் கடந்த ஜூன் மாதம் நுழைந்த சீன ராணுவத்தினர் அங்கு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து, அங்கு ஏராளமான இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தில்லியில் உள்ள இந்திய - திபெத் எல்லைக் காவல் படை தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தற்போது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாம் பகுதியில் மோதல் சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை சீனாவும் முன்னெடுக்கும் என நம்புகிறேன். எல்லைப் பகுதியில் இந்திய - திபெத் காவல் படையினர் வெளிப்படுத்தி வரும் வீரம் பாராட்டுக்குரியது. நமது ராணுவத்தினரின் வீரத்தை அறிந்த எந்த நாட்டவருக்கும் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க துணிச்சல் வருவதில்லை.
அண்டை நாடுகள் உள்பட மற்ற நாடுகளுக்குச் சொந்தமான பகுதிகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. நாட்டு எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற விருப்பமும் எங்களுக்கு கிடையாது. அமைதியை மட்டுமே இந்தியா விரும்புகிறது என்பதை அண்டை நாடுகளுக்குக் கூறிக்கொள்கிறேன்.
போரின் மீதோ, மோதலின் மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதேசமயத்தில், எங்கள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு எந்த விலையையும் கொடுக்க இந்தியா தயங்காது என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம். மற்ற நாடுகளிடமிருந்து எங்களின் எல்லைகளைப் பாதுகாக்கும் வல்லமை இந்திய ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இருக்கிறது என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com