தேர்தல் நன்கொடை மீதான கட்டுப்பாடு நடைமுறைக்கு உகந்ததுதானா?: நாடாளுமன்றக் குழு கேள்வி

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள் ரூ.2000 வரை மட்டுமே ரொக்கமாக நன்கொடை அளிக்க முடியும் என்று உச்சவரம்பு

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள் ரூ.2000 வரை மட்டுமே ரொக்கமாக நன்கொடை அளிக்க முடியும் என்று உச்சவரம்பு நிர்ணயித்திருப்பது நடைமுறைக்கு ஏற்றதுதானா? என்று சட்டம், பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இப்போதைய விதிகளின்படி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர்களிடம் இருந்து ரொக்கமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடை பெறலாம். ஆனால், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரத்தை மட்டும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில் நிதி மசோதா -2017-இல் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதில், 'அரசியல் கட்சிகள் தனிநபர்களிடம் இருந்து 2,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற வேண்டும். அதற்கு மேல் உள்ள தொகையை காசோலை உள்ளிட்ட பிற வழிகள் மூலம் மட்டுமே பெற வேண்டும்' என்று வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டது.
முன்னதாக, இந்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்று தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. புதிய முடிவை வரவேற்ற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சிலர், 'அரசியல் கட்சிகள் விதிமீறல்களில் ஈடுபட முடியாத அளவுக்கு மேலும் பல கடுமையான விதிமுறைகளை புதிய சட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் கருப்புப் பணத்தை மாற்றும் இடமாக தேர்தல் களம் அமைந்துவிடும். அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதை முற்றிலுமாகத் தடுத்து, இதில் முழுவதும் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை கொண்டு வர வேண்டும்' என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், சட்டம், பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அதில், நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலையில் ரூ.2,000 வரையிலான நன்கொடையை மட்டும்தான் ரொக்கமாக அரசியல் கட்சிகள் ரொக்கமாகப் பெற வேண்டும் என்ற விதி ஏற்புடையதுதானா?
இதில் நன்கொடை அளிப்பவர்கள் தொடர்பான ரகசியம் பாதுகாக்கப்படுமா? ரூ.2 ஆயிரத்துக்கும் மேலான நன்கொடையை காசோலையாக அளிக்க வேண்டுமென்றால் எத்தனை பேர் நன்கொடை அளிக்க முன்வருவார்கள்? என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com