பவானா தொகுதியில் நாளை இடைத் தேர்தல்: "கௌரவ' போட்டியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ்!

தில்லியிலுள்ள பவானா பேரவைத் தொகுதியில் புதன்கிழமை (ஆக.23) இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பவானா தொகுதியில் நாளை இடைத் தேர்தல்: "கௌரவ' போட்டியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ்!

தில்லியிலுள்ள பவானா பேரவைத் தொகுதியில் புதன்கிழமை (ஆக.23) இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் வெற்றியை, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் கௌரவப் பிரச்னையாக கருதுகின்றன.

தில்லியின் 12 தனித் தொகுதிகளில் ஒன்றான பவானா தொகுதியில் ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த வேத பிரகாஷ், கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். இதையடுத்து காலியான அந்த தொகுதிக்கு, ஆக.23-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தீவிரமடைந்த தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இந்தத் தொகுதியில் மொத்தம் 2.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் முதல் முறையாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை 28-ம் தேதி நடைபெறுகிறது.

மும்முனைப் போட்டி: தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் 3 ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன. பாஜக வேட்பாளராக வேத பிரகாஷ் அறிவிக்கப்பட்டார். ஆம் ஆத்மி சார்பில் ராம் சந்திராவும், காங்கிரஸ் வேட்பாளராக, ஏற்கெனவே 3 முறை எம்எல்ஏ-வாக இருந்த சுரேந்தர் குமாரும் அறிவிக்கப்பட்டனர்.  இத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ள போதிலும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது. பவானா தொகுதியில் வெல்வதை, மூன்று கட்சிகளுமே கௌரவப் பிரச்னையாக கருதுகின்றன.

ஆம் ஆத்மி நம்பிக்கை: கடந்த 2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அசுர பலத்துடன் பேரவைக்குள் நுழைந்த ஆம் ஆத்மி கட்சி, அதன்பிறகு இறங்குமுகத்தில்தான் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப், கோவா பேரவைத் தேர்தல்களிலும், தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ரஜௌரி கார்டன் இடைத் தேர்தல், மாநகராட்சித் தேர்தல் ஆகியவற்றிலும் ஆம் ஆத்மி சோபிக்கவில்லை.

ஆனால், ரஜௌரி கார்டன் தேர்தல் முடிவு, பவானா இடைத் தேர்தலில் எதிரொலிக்காது என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இத்தேர்தலுக்காக, தில்லி பிரிவு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான கோபால் ராய், பவானாவில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினார். முதல்வர் கேஜரிவாலும், பல்வேறு பாத யாத்திரைகள் மேற்கொண்டதுடன், ஏராளமான சிறிய பிரசார கூட்டங்களில் பேசினார்.

காங்கிரஸ் வியூகம்: பவானா தொகுதியில் தங்களுக்கு இருந்த வலுவான ஆதரவை மீட்டெடுக்கும் வியூகத்துடன் களமிறங்கிய காங்கிரஸ், இத்தொகுதியில் கணிசமான அளவில் உள்ள ஜாட் இனத்தவரை கவரும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. ஜாட் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

மோடியின் சாதனைகளை முன்வைத்து...: ரஜௌரி கார்டன் இடைத் தேர்தல், தில்லி மாநகராட்சித் தேர்தல் என தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் பாஜக, இம்முறையும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை முன்வைத்தே பாஜகவின் பிரசாரம் இருந்தது. ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரும், தெற்கு தில்லி பாஜக எம்பியுமான பர்வேஷ் வர்மா, வடக்கு தில்லி பாஜக எம்பி உதித் ராஜ் உள்ளிட்டோர் வேத பிரகாஷை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

எனினும், பவானா தொகுதி பாஜக முன்னாள் எம்எல்ஏ குகன் சிங், பாஜக முன்னாள் கவுன்சிலர் நாராயண் சிங் ஆகியோர் அண்மையில் ஆம் ஆத்மியில் இணைந்தனர். இது, பாஜகவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

3 முக்கிய வேட்பாளர்கள்...
வேத பிரகாஷ்
(பாஜக)
2015 தில்லி பேரவைத் தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்த வேத பிரகாஷ், அந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததை எதிர்த்து, ஆம் ஆத்மியில் இணைந்தார். பின்னர், 2015 தேர்தலில் பவானா தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு சுமார் 1,09,259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய வேத பிரகாஷை, அதே தொகுதியில் வேட்பாளராக அறிவித்தது பாஜக.


ராம் சந்திரா
(ஆம் ஆத்மி)
2008 தில்லி பேரவைத் தேர்தலில் பவானா தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட ராம் சந்திரா, பின்னர் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு இந்தியா இயக்கத்தில் பங்கெடுத்தார். அதன் பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் ராம் சந்திரா இணைந்தார், பவானா தொகுதியில்  பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவரை வேட்பாளராக தேர்வு செய்ததாக ஆம் ஆத்மி குறிப்பிட்டது.

சுரேந்தர் குமார்
(காங்கிரஸ்)
பவானா தொகுதியில் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் 3 முறை தொடர்ச்சியாக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சுரேந்தர் குமார். பவானா தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர். 3 முறை எம்எல்ஏவாக இருந்தபோதும் தன்னலம் பாராமல் மக்கள் பணியாற்றியவர் என்ற முறையில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது.

பவானா தொகுதி விவரம்...
*    தில்லியிலுள்ள 12 தனித் தொகுதிகளில் ஒன்றாகும்.
*     கடந்த 1993-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக இத்தொகுதி ஒதுக்கப்பட்டது.
*    மேற்கு தில்லி மக்களவை தொகுதியில் அடங்கியது.
*    ஹரியாணாவின் ஜஜ்ஜார், சோனிபட் ஆகிய மாவட்டங்களையொட்டி அமைந்தது.
*    26 கிராமங்களையும், குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளையும் உள்ளடக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com