முத்தலாக் முறைக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட கருத்தால் பரபரப்பு

முத்தலாக் முறை சட்ட அங்கீகாரமற்றது; முத்தலாக் முறையைப் பின்பற்றி இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
முத்தலாக் முறைக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட கருத்தால் பரபரப்பு

புது தில்லி: முத்தலாக் முறை சட்ட அங்கீகாரமற்றது; முத்தலாக் முறையைப் பின்பற்றி இஸ்லாமிய பெண்களுக்கு விவகாரத்து வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், முத்தலாக் முறையை தடை செய்யும் வகையில் 6 மாதத்துக்குள் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அப்போது, இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அதே சமயம், உச்ச நீதிமன்ற நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகளில் 2 நீதிபதிகள், மதம் தொடர்பான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடாது என்றும், இது குறித்து மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தது.

அதோடு, முத்தலாக் முறைக்கு 6 மாதம் இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

ஆனால், 5 பேரில் 3 நீதிபதிகள், இஸ்லாமிய பெண்களை முத்தலாக் முறையில் விவகாரத்து செய்யக் கூடாது என்றும், முத்தலாக்கிற்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர். அரசியல் சாசனத்தின் 3 நீதிபதிகள் இந்த கருத்தைக் கூறியிருந்ததால் இதுவே இறுதித் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இஸ்லாமிய நாடுகளிலேயே முத்தலாக் முறையை தடுத்துநிறுத்தி விட்ட நிலையில், சுதந்திர இந்தியாவில் அதைச் செய்ய ஏன் தயக்கம் என்றும் நீதிபதிகள் வினவினர். அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்களது அரசியல் பேதங்களை பின்தள்ளிவிட்டு, முத்தலாக் முறைக்கு எதிராக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.


வழக்கின் பின்னணி: 
முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்க 3 முறை தலாக் என்று சொல்லும் முத்தலாக் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தொடுத்தார். இதேபோல், முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும் நிக்கா ஹலாலா, பலதார மணம் ஆகிய நடைமுறைகளை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட 7 மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது. சீக்கிய மதத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசப், பார்சி மதத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.எஃப். நாரிமன், ஹிந்து மதத்தைச் சேர்ந்த யு.யு. லலித், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நீதிபதி எஸ். அப்துல் நாஸர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை விடுமுறை காலத்திலும் தொடர்ந்து 6 நாள்கள் விசாரித்தது. இதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை இன்று அளித்தது.

முன்னதாக, வழக்கு மீதான விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், முத்தலாக் நடைமுறையானது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வாதிட்டனர். மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், உச்ச நீதிமன்றத்தால் முத்தலாக் நடைமுறை செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், முஸ்லிம் மதத்தில் திருமணத்தை முறைப்படுத்த சட்டத்தை கொண்டு வரத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் மதத்தில் விவாகரத்து அளிக்க கடைபிடிக்கப்படும் தலாக்-இ-பிடாட், தலாக் ஹசன், தலாக் அசன் ஆகிய 3 நடைமுறைகளும் தன்னிச்சையானது என்றும், சட்டத்துக்கு புறம்பானது என்றும் மத்திய அரசால் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதாடியபோது, அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படுவது போல, முத்தலாக் நடைமுறை என்பது மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையாகும்; இதற்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய முடியாது என்றார். முத்தலாக் நடைமுறையை 1,400 ஆண்டுகளாக முஸ்லிம் மதத்தினர் பின்பற்றி வருவதாகவும், இதில் தலையிட்டு நாடாளுமன்றத்தால் கூட சட்டமியற்ற முடியாது, சம்பந்தப்பட்ட முஸ்லிம் மதத்தினர்தான் அதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கபில் சிபல் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com