முத்தலாக் தீர்ப்புக்கு வழிவகுத்த 5 பெண்களின் கண்ணீர் கதை!

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கப் பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.
முத்தலாக் தீர்ப்புக்கு வழிவகுத்த 5 பெண்களின் கண்ணீர் கதை!


புது தில்லி: முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கப் பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும், அந்த நடைமுறை அரசியல் சாசனத்துக்கும், குரானின் படிப்பினைகளுக்கும் எதிரானது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள்தான்.

இஷ்ரத் ஜஹான், ஷாயரா பானு, அஃப்ரீன் ரெஹ்மான், அதியா சப்ரி, குல்ஷான் பர்வீன் ஆகிய 5 பெண்களும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த ரிட் மனு தான் இந்த தீர்ப்புக்கு அடிப்படையாக அமைந்தது.

தொலைபேசி மூலமாக முத்தலாக்.. எதிர்த்த இஷ்ரத் ஜஹான்
மேற்கு வங்க மாநிலம் ஹௌராவைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹானுக்கு கடந்த 2015ம் ஆண்டு, துபாயில் இருந்த தனது கணவர் மொஹம்மது முர்தாஸா அன்சாரி, தொலைபேசி வாயிலாக மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்து அளித்தபோது வானமே இடிந்து அவர் தலையில் விழுந்தது போல உணர்ந்தார்.
"தொலைபேசி மூலமாக முத்தலாக் சொன்னதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தேன். ஒரு இஸ்லாமிய பெண்ணாக முத்தலாக்கைக் கூட ஏற்றுக் கொள்வேன். ஆனால், தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சலிலுலோ முத்தலாக் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனை எதிர்த்தே வழக்குத் தொடர்ந்தேன். முத்தலாக், இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையே நாசமாக்குகிறது. எனவே, ஒன்று திரண்டு வாருங்கள் அதனை எதிர்த்துப் போராட" என்கிறார் அவர்.

குழந்தைகளுடன் ரயில் நிலையத்தில் விடப்பட்டவர் ஷாயரா பானு
2002ம் ஆண்டு தனது மண வாழ்க்கையைத் தொடங்கிய ஷாயரா பானு, கொஞ்சம் கொஞ்சமாக தனது திருமண பந்தத்தின் முடிச்சு அவிழ்க்கப்பட்டு, ஒரு நாள் வெற்று காகிதத்தில் தலாக் எழுதி கொடுத்த தனது கணவர் ரிஸ்வான் அகமது கொடுத்த போது அனைத்தும் முடிந்துவிட்டதை உணர்கிறார். இரண்டு குழந்தைகளோடு மொராதாபாத் ரயில் நிலையத்தில் தன்னை கணவர் இறக்கிவிட்டுச் சென்ற அந்த நிமிடத்தை நினைவு கூருகிறார்.

உத்ராகண்டைச் சேர்ந்த ஷாயரா பானு, வரதட்சிணைக் கொடுமைக்கும் உள்ளானவர். கணவர் மற்றும் அவரது பெற்றோரின் வன்கொடுமைக்கு ஆளாகி, குடும்பத்தாரின் வற்புறுத்தலால் 6 முறை கருக்கலைப்பு செய்துகொண்டார். தனக்கு நேரிட்ட இந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று முத்தலாக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி இன்று வெற்றியும் பெற்றுள்ளார்.

மூன்று மாதத்தில் திருமண பந்தத்தை இழந்த அஃப்ரீன் ரெஹ்மான் 

எம்பிஏ பட்டதாரியான அஃப்ரீன் ரெஹ்மான், 2014ம் ஆண்டு வரன்தேடும் இணையதளம் மூலம் அஷ்வர் வர்சியை மணம் முடித்தார். திருமணமாகி 3 மாதத்தில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கணவர் வீட்டார் செய்த வன்கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறினார். ஏற்கனவே தந்தையை இழந்தவர் அஃப்ரீன். கணவர் வீட்டார் கேட்ட வரதட்சிணையை அவரது அண்ணன்தான் கொடுத்துள்ளார். எனினும் அவர்களது கொடுமை தொடர்ந்ததால் வீட்டை விட்டு வெளியேறினார் அஃப்ரீன். இந்த பிரச்னைகளுக்கு இடையே தனது தாயை, சாலை விபத்தில் இழந்தார். தனது வாழ்க்கையில் நேரிட்ட இன்னலைக் கண்டு துவளவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்தார்.

அதியா சப்ரி
முத்தலாக் முறைக்கும், இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஃபட்வாஸ்களுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு பிரதமர் மோடியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அதியா சப்ரி.

2012ம் ஆண்டு சுல்தான்புரைச் சேர்ந்த வஜித் அலியை திருமணம் செய்து கொண்ட அதியா சப்ரி, இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்த போது, கணவரால் முத்தலாக் மூலம் விவகாரத்து கொடுக்கப்பட்டது.

பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததற்காக, எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையாகவே கணவர் வீட்டார் முத்தலாக்கை நினைத்தனர். என்னை விஷம் வைத்துக் கொல்லவும் முயன்றனர். எல்லாவற்றையும் பார்த்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினேன். விவகாரத்து பற்றி என் கணவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை. என்னுடைய கருத்தையும் கேட்கவில்லை. பிறகு எப்படி என்னால் விவகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என்கிறார் ஆதியா.

குல்ஷான் பர்வீன்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்ஷான் பர்வீன், 2015ம் ஆண்டு தனது பெற்றோரைப் பார்க்க சென்றிருந்த போது 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் கணவர் மூலம் தலாக் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை குல்ஷான் எதிர்த்த போது, அவரது கணவர், குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார்கள்.

நன்கு படித்து பணியாற்றிக் கொண்டிருந்த குல்ஷான், தன்னை விட படிப்பறிவுக் குறைந்த நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு, குல்ஷானை, அவரது கணவர் வீட்டார் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு துரத்தினர். இறுதியாக குல்ஷான் தனது கணவர் வீட்டுக்கு வந்த போது, உடல் ரீதியான துன்புறுத்தல்களும் நடந்தன. பல நாட்கள் பட்டினி கிடந்த குல்ஷான், தனது மகனுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டார். கொடுமையும், தாக்குதலும் தொடர்ந்ததால், இனியும் தாங்க முடியாது என உச்ச நீதிமன்றத்தை நாடினார். 

இந்த ஐந்து பெண்களும் தொடர்ந்த வழக்கில்தான் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

வழக்கின் பின்னணி: 
முத்தலாக் முறைக்கு எதிரான ரிட் மனுக்களை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வு வெளியிட்ட 395 பக்கத் தீர்ப்பில், 'அமர்வில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளில், பெரும்பான்மையான 3 பேர் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், முத்தலாக் விவாகரத்து முறை சட்டபூர்வமாக செல்லாததாக அறிவிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது, அரசியல் சாசனத்துக்கு விரோதமாக தனி நபர்கள் கடைப்பிடிக்கும் தவறான வழிமுறையாகும். எனவே, அந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மைத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களின் முத்தலாக் விவாகரத்து முறை, பலதார திருமணம், நிக்கா ஹலாலா உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 7 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் முஸ்லிம் பெண்கள் தாக்கல் செய்திருந்த 5 மனுக்களும் அடங்கும்.

இந்த மனுக்களை விசாரிக்க, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன், யு.யு. லலித், அப்துல் நஸீர் ஆகிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த அமர்வில் இடம் பெற்றிருக்கும் 5 நீதிபதிகளும் சீக்கிய, கிறிஸ்தவ, பார்சி, ஹிந்து, முஸ்லிம் மதங்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின்போதே, முத்தலாக் முறை சட்டபூர்வமானதாகக் கருதப்பட்டாலும், அது மிக மோசமான, விரும்பத்தகாத விவாகரத்து முறை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூகநல ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சட்ட வல்லுநர் சோலி சோரப்ஜி இது தொடர்பாகக் கூறுகையில், 'இது மிகவும் முற்போக்கான தீர்ப்பு. இதன் மூலம் முஸ்லிம் பெண்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. இனிமேல் முத்தலாக் கூறி முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com