மத்திய அமைச்சர்களின் உதவியாளர் பணியிடங்களுக்கு சிபாரிசு அடிப்படையில் நியமனம் இல்லை: மத்திய அரசு

மத்திய அமைச்சர்களின் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சிபாரிசு, பரிந்துரை உள்ளிட்டவை அடிப்படையில் நடைபெற்ற நியமனங்களை மத்திய அரசு அதிரடியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

மத்திய அமைச்சர்களின் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சிபாரிசு, பரிந்துரை உள்ளிட்டவை அடிப்படையில் நடைபெற்ற நியமனங்களை மத்திய அரசு அதிரடியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், மத்திய பணியாளர் நல அமைச்சகம் சார்பில் தயாரிக்கப்பட்ட கையேடு வெளியிடப்பட்டது. மத்திய அரசின் உயர்பதவிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை குறித்து அதில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மத்திய அமைச்சர்களின் தனிச் செயலர்கள், உதவி அதிகாரிகள் ஆகிய உயர்ந்த பணியிடங்களுக்கு நியமனம் நடைபெறும்போது, அதற்கு தேர்வு செய்யப்படும் பட்டியலில் இருக்கும் அதிகாரியின் கடந்த 10 ஆண்டுகால பணி அனுபவத்தை ஆய்வு செய்து, ஆண்டுவாரியாக அவரது செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நியமனம் நடைபெறும். இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்போது, தகுதியில்லாத பலர் அதிக மதிப்பெண்களுடன் அந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவது நடைபெற்றது. அதாவது, சிபாரிசு, பரிந்துரை ஆகியவற்றின் மூலம், அந்தப் பதவிகளுக்கு அதிகம் பேர் தேர்வாகினர். இந்த நடைமுறை தற்போது மத்திய அரசால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசில், நேர்மை மற்றும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனங்கள் நடைபெறுகின்றன. மத்திய அமைச்சர்களின் தனிச் செயலர்கள், உதவி அதிகாரிகள் ஆகிய பணியிடங்களில் நியமிக்கப்படும் அதிகாரிகள், தீவிர ஆய்வுக்குப் பிறகே தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதனால், தற்போது மத்திய அமைச்சர்களின் கூடுதல் செயலர் பணியிடங்களில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் அல்லாது ஐ.பி.எஸ். அதிகாரி, ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள், ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள், ஐ.ஏ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று சுமார் 120 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேபோல், மத்திய அரசு பணியிடங்களில் இருக்கும் அதிகாரிகளின் பணியிடமாற்றம், பதவி உயர்வு தொடர்பான வதந்திகளுக்கும் தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், 'எம்ப்ளாயிஸ் ஆன்லைன்' என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று அந்த கையேட்டில் மத்திய பணியாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com