இந்தியா-பாக். ராணுவ அதிகாரிகள் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
எல்லையில் அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரு தரப்பில் இருந்து படைப் பிரிவின் கமாண்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். எல்லையில் அமைதி நிலவ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களைக் குறிவைத்து தாக்குவது குறித்தும், அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களால் இந்தியாவில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழப்பது குறித்தும் பாகிஸ்தானிடம் எடுத்துக் கூறப்பட்டது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள சாகன்தா பாக் பகுதியில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடந்த இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் வரை நீடித்தது. ராணுவ கமாண்டர்கள் நிலையில் தொடர்ந்து இதுபோன்ற பேச்சுகளை நடத்த இரு தரப்பும் சம்மதித்தன.
சாகன்தா பாக் வழியாக வர்த்தகப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் கடந்த 1-ஆம் தேதி வரை, பாகிஸ்தான் ராணுவம் 285 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துவிட்டனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடைபெற்ற தாக்குதல்களைவிட இது அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com