கேஜரிவால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அருண் ஜேட்லி புதிய மனு தாக்கல்

அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கேஜரிவால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அருண் ஜேட்லி புதிய மனு தாக்கல்

அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 4 வாரங்களுக்குள்  பதிலளிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய முதல்வர் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் 5 மூத்த தலைவர்கள் மீது ரூ. 10 கோடி கேட்டு மத்திய நிதியமைச்சரும், கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியுமான அருண் ஜேட்லி 2015ஆம் ஆண்டு அவதூறு வழக்குத் தொடுத்திருந்தார்.

கடந்த மே 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, கேஜரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத் மலானி, அருண் ஜேட்லிக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்தார்.

மேலும், முதல்வர் கேஜரிவாலிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ராம்ஜேத் மலானி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல்வர் கேஜரிவால் நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, மத்திய அமைச்சருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கேஜரிவாலுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி, இந்த வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் முதல்வர் கேஜரிவாலுக்கு ஆஜராவதில் இருந்து ராம்ஜேத் மலானி விலகினார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த முதல்வர் கேஜரிவால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருண் ஜேட்லி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த ராம்ஜேத் மலானிக்கு அனுமதி அளிக்கவில்லை
என்று முதல்வர் கேஜரிவால் கூறியிருந்தார். இதை ராம்ஜேத் மலானி மறுத்துள்ளார்.

உயர் பதவியில் இருக்கும் முதல்வர் கேஜரிவால் நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளித்துள்ளார். ஆகையால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன், அருண் ஜேட்லியின் புதிய மனு மீது 4 வாரங்களுக்குள் முதல்வர் கேஜரிவால் பதிலளிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com