தேரா தலைவர் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு: ஹரியாணா, பஞ்சாபில் பதற்றம்

தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்திய போலீஸார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்திய போலீஸார்.

தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இதனால், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, அங்கு போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2002-ஆம் ஆண்டு தனது பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, குர்மீத் சிங் நேரில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் குர்மீத் சிங்கின் அமைப்பில் ஏராளமானோர் இருப்பதால் தீர்ப்பை அடுத்து அங்கு வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அனைத்து விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் நிலைமையைக் கருத்தில் கொண்டு ராணுவத்தை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பதற்றம் அதிகமுள்ள இடங்களில் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். பள்ளி, கல்லூரிகளுக்கு 25-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பதற்றமுள்ள இடங்களுக்கு அன்றைய தினம் அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலா நகரில் உள்ள தேரா அமைப்பின் மண்டபத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் தொடர்ந்து குவிந்து வருவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குர்மீத் சிங் மீது பாலியல் பலாத்கார வழக்கு மட்டுமல்லாது, தங்கள் அமைப்பு குறித்து புலனாய்வு செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரை கொலை செய்த குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், அவர் இவற்றை மறுத்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com