வெள்ளம்: பிகாரில் பலி எண்ணிக்கை 367 ஆனது: அஸ்ஸாம் உள்பட 3 மாநிலங்கள் பாதிப்பு

பிகார் மாநிலத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி புதன்கிழமை 26 பேர் உயிரிழந்தனர்.

பிகார் மாநிலத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி புதன்கிழமை 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, நிகழாண்டில் அந்த மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 367-ஆக உயர்ந்துவிட்டது.
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், அந்த மாநிலங்கள் வெள்ளப் பாதிப்புகளிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:
பிகாரில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 19 மாவட்டங்களில் 1.58 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்திலிருந்து பாய்ந்தோடிவரும் நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
அந்த மாநிலத்தில் இதுவரை வெள்ளத்தில் சிக்கி 82 பேர் உயிரிழந்துவிட்டனர். 24 மாவட்டங்களில் உள்ள 2,855 கிராமங்களைச் சேர்ந்த 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 71 பேர் உயிரிழந்துவிட்டனர்.
வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நிலைமை இன்னமும் சரியாகவில்லை. சில பகுதிகளில் மட்டும் வெள்ளநீர் வடிந்து வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் படகில் பிறந்தது குழந்தை: இதனிடையே, பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசியப் பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) படகில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது என்டிஆர்எஃப் படகில் ஏற்கெனவே 2 முறை பிரசவம் நடைபெற்றுள்ளது.
நிதீஷ் ஆய்வு: பிகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். உயிரிழந்தவர்களில் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.
பிகாருக்கு பிரதமர் பயணம்: பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு பகுதிகளை சனிக்கிழமை (ஆக. 26) பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com