மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதாக அம்மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், சனிக்கிழமை தெரிவித்தார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சௌதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் 28-ந் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது என்று விமர்சித்துள்ள தேரா சச்சா சௌதா அமைப்பு, அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ராம் ரஹீம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாப்பின் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. இதில் 32 பேர் உயிரிழந்தனர், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த கலவரம் தொடர்பாக உயர்நிலைக் கூட்டம் கூடி விவாதித்தோம். டிஜிபி, உள்துறை செயலர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மூன்று மாவட்டங்களில் ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அடுத்த 48 மணிநேரமும் தொடர்ந்து கவனமாக இருக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பஞ்சாப்பில் இதுவரை எந்த உயர்சேதமும் இல்லை. எங்கும் துப்பாக்கிச் சூடு, கலவர தடுப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறவில்லை. தீர்ப்பு வரும்போது அங்கு கூட்டம் கூடுவதை தடுத்து இருக்க வேண்டும். எந்த விதத்திலும் பஞ்சாப்பில் கலவரம் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com