பாலியல் வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி

பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ரோத்தக் சிறையில் அடைப்பதற்காக ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட குர்மித் ராம் ரஹீம் சிங்.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ரோத்தக் சிறையில் அடைப்பதற்காக ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட குர்மித் ராம் ரஹீம் சிங்.

பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம், வரும் 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹரியாணா மாநிலம், சிர்சாவில் செயல்படும் தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங் (50), இரு பெண் பக்தர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக, கடந்த 2002-ஆம் ஆண்டில் பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதிக்கு பெயரிடப்படாத ஒரு கடிதம் வந்தது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் குர்மீத்துக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ பதிவு செய்தது.
இந்த வழக்கில், அம்பாலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட இரு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதனிடையே, அம்பாலாவில் இருந்து சண்டீகர் அருகேயுள்ள பஞ்ச்குலாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 17-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அப்போது நீதிமன்றத்தில் குர்மீத் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். அதன்படி, பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குர்மீத் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
இதையடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜகதீப் சிங், குர்மீத்தை குற்றவாளியாக அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம், வரும் 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, குர்மீத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த போலீஸார், அவரை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்று ரோத்தக் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், அவருக்கு 7 ஆண்டுகளுக்கு குறையாமலோ அல்லது ஆயுள் சிறைத் தண்டனையோ விதிக்கப்பட வாய்ப்புள்ளது. காணொலி முறையில் (விடியோ கான்ஃபரன்ஸ்) இத்தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, சிர்சாவில் உள்ள தனது அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இருந்து பஞ்ச்குலாவுக்கு குர்மீத் காரில் புறப்பட்டார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக சுமார் 200 வாகனங்கள் சென்றன. அப்போது, சாலையோரம் திரண்ட அவரது பக்தர்கள், பஞ்ச்குலாவுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி கதறி அழுதனர்.
மேல் முறையீடு: இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது என்று விமர்சித்துள்ள தேரா சச்சா சௌதா அமைப்பு, அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com