குர்மீத் ராம் ரஹீமுக்கு தண்டனை இன்று அறிவிப்பு: பதற்றத்தில் பஞ்சாப், ஹரியாணா

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு அளிக்கப்பட
குர்மீத் ராம் ரஹீமுக்கு தண்டனை இன்று அறிவிப்பு: பதற்றத்தில் பஞ்சாப், ஹரியாணா

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு அளிக்கப்பட இருக்கும் தண்டனை விவரம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் இன்று திங்கள்கிழமை (ஆக.28) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பதற்றம் நிலவி வருகிறது.

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று ரோத்தக் சிறப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களில் 38 பேர் உயிரிழந்து விட்டனர். ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், குர்மீத்துக்கான தண்டனை விவரம் இன்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால் ஹரியாணா அரசும், பஞ்சாப் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன்படி, ஹரியாணாவில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களும் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தண்டனை விவரம் வெளியிடப்பட்டதும், குர்மீத்தின் ஆதரவாளர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குர்மீத் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி உள்பட ரோத்தக் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறை செல்லும் சாலை நெடுகிலும் தடுப்பு அரண்களை அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல், பஞ்ச்குலா, சிர்சா, பதேஹாபாத் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த 13 மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோத்தக் மாவட்ட தேரா சச்சா சௌதா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் முன்னெச்சரிகை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் போலீஸார் வைத்துள்ளனர்.

தீர்ப்பைத் தொடர்ந்து எழும் எத்தகைய சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்ள காவல்துறையினர் தயார் நிலையில் இருப்பதாக ரோத்தக் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு திங்கள்கிழமை தண்டனை அறிவிக்கப்பட்டதும், வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக ஹரியாணா மாநில உளவுத்துறை (சிஐடி) எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் கலவரத்தில் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்கும் வகையில், தேரா சச்சா சௌதா அமைப்பின் சொத்துகளை விற்கவும், குத்தகைக்கு விடவும் தடை விதித்ததுடன், சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யும்படியும் ஹரியாணா அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன்தொடர்ச்சியாக, தேரா சச்சா சௌதா அமைப்புக்குச் சொந்தமான அசையும், அசையாச் சொத்துகள் பட்டியலை சேகரிக்கும் பணியை குர்கான் மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், இன்று தீர்ப்பு வாசிப்பதற்காக, சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் ரோதக் சிறைக்கு செல்கிறார். நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் சிறை வளாகத்திற்குள்ளேயே நடத்தி முடிக்கப்படும். இதனால் கலவரம் ஏற்படாமல் தடுக்க, ஹரியானாவின் பஞ்ச்குலா, சண்டிகர், மொஹாலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநிலப் போலீஸாருடன் இணைந்து, ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் தில்லியில் தீவிர உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com