குர்மீத் ராம் ரஹீமுக்கு இன்று தண்டனை அறிவிப்பு: கல், கம்பு மற்றும் கட்டைகளுடன் தயாராகும் கிராமம்! 

சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவிக்க உள்ள நிலையில், வன்முறையில் ஈடுபடும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்ள கல், கம்பு மற்றும் கட்டைகளுடன்...
குர்மீத் ராம் ரஹீமுக்கு இன்று தண்டனை அறிவிப்பு: கல், கம்பு மற்றும் கட்டைகளுடன் தயாராகும் கிராமம்! 

சிர்ஸா: சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவிக்க உள்ள நிலையில், வன்முறையில் ஈடுபடும் அவரது ஆதரவாளர்களை எதிர்கொள்ள கல், கம்பு மற்றும் கட்டைகளுடன் ஒரு கிராமம் தயாராகி வருகிறது.

ஹரியானாவின் சிர்ஸாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'தேரா சச்சா சவுதா' சீக்கிய அடிப்படைவாத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம். அவரது பெண் சீடர்கள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவர் கடந்த 25-ஆம் தேதி பஞ்ச்குல்லாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். உடனடியாக அவர் ரோஹ்தக் நகர சிறையிலடைக்கப்பட்டார்.

உடனே பஞ்சாப்  ஹரியானா மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் பயங்கர வன்முறை பரவியது. இதில் 38 பேர் மரணமடைந்தனர். பல நூறு பேர் காயம் அடைந்தனர். ஏகப்பட்ட பொருட்சேதமும் உண்டானது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதியம் 2.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதின்ற நீதிபதி தண்டனை விபரத்தினை அறிவிக்க உள்ளார். இதனை ஒட்டி மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்பதால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபடும் சாமியாரின் ஆதரவாளர்களை எதிர்கொள்ள கல், கம்பு மற்றும் கட்டைகளுடன் ஒரு கிராமம் தயாராகி வரும் தகவல் தெரிய வந்துள்ளது.

'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைமையிடமான சிர்ஸாவிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஷாபுர் பெகு. சுமார் 9000 பேர் வசிக்கும் இந்த கிராமம்தான் தற்பொழுது இந்த தீர்ப்பினை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் ஆதரவாளர்கள் இல்லை.

இது குறித்து கிராமவாசிகள் சிலர் கூறியதாவது:

அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில்தான் எங்கள் கிராமம்  உள்ளது. ஆனாலும் 3 கிலோ மீட்டர் தொலைவில்தான் போலீசார் பாதுகாப்பு தடுப்புகளை உருவாக்கியுள்ளனர்.

எனவே தீர்ப்பு அறிவிப்பின் பொழுது எங்களை தற்காத்துக் கொள்ள இரும்புத் தடிகள், கற்கள், செங்கற்கள் மற்றும் கம்புகளை எங்கள் வீட்டுக் கூரைகளில் சேகரித்து வைத்து இருந்தும். ஆனால் அவர்கள் அப்பொழுது வரவில்லை.

எனவே இன்று தண்டனை அறிவிக்கப்படும் நாளில் அவர்கள் மேலும் ஆத்திரமாக செயல்படலாம். அவ்வாறு அவர்கள் நுழைந்து எங்களை தாக்கினாலோ அல்லது பொருள்களுக்கு சேதம் உண்டாக்கினாலோ இவற்றை நாங்கள் பயன்படுத்துவோம்.

இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அதே சமயம் சிர்ஸா தலைமையிடத்திலிருந்து 'தேரா சச்சா சவுதா' அமைப்பினர்கள் சிறிது சிறிதாக வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com