மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

வரும் 2024-ஆம் ஆண்டு முதல் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) பரிந்துரைத்துள்ளது.
மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

வரும் 2024-ஆம் ஆண்டு முதல் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) பரிந்துரைத்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து மத்திய அரசுக்கு நீதி ஆயோக் மூன்றாண்டு செயல் திட்ட அறிக்கையை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய நலன் கருதி 2024-ஆம் ஆண்டு முதல் மக்களவைக்கும், பல்வேறு மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். இத்தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது வசதியாக இருக்கும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் இது தொடர்பாக ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளனர்.
மறைமுக வேலையின்மை: இந்தியாவில் நிலவி வரும் வேலையின்மைப் பிரச்னை கூறித்து நீதி ஆயோக் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் இப்போது வேலையின்மை என்பது பெரிய பிரச்னையாக இல்லை. அதே நேரத்தில் மறைமுக வேலையின்மை (படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை கிடைக்காமல், குறைந்த சம்பளத்தில் வேலைபார்ப்பது) பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இப்போது வேலையின்மை பிரச்னை குறைவாகவே உள்ளது. அதிக செயல்திறன் தேவைப்படும், நல்ல ஊதியம் வழங்கும் வேலைகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உருவாக்குவோம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின்கீழ் சர்வதேச சந்தைக்குத் தேவைப்படும் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
கடலோரப் பகுதி நகரங்களில் புதிய தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதன் மூலம் சீனாவுக்கு செல்லும்
பன்னாட்டு நிறுவனங்களை
இந்தியாவின் பக்கம் திருப்ப முடியும்.
தனி நீதிமன்றம்: இந்தியாவில் இப்போது போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகள் மிக அதிகம் உள்ளன. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் 37.4 சதவீதம் சாலை விபத்துகள் தொடர்பானவைதான். எனவே, இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தனி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
நிலத்தடி நீர் மேம்பாட்டு வாரியம்: நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள நீதி ஆயோக், நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், அதனைக் காப்பதற்கும் தனி வாரியத்தை அமைக்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது.
இப்போது, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் செலவுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. அதன் பிறகு அடுத்த ஆண்டில்தான் மீண்டும் வரவு-செலவு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
அப்படி இல்லாமல் 6 மாதத்துக்கு ஒருமுறை ஏற்கெனவே செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதுதானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிஆயோக் ஆலோசனை கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com