மதத்தின் பெயரால் வன்முறை கூடாது

எந்தவொரு மத நம்பிக்கையின் பெயரால் வன்முறை நிகழ்த்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மதத்தின் பெயரால் வன்முறை கூடாது

எந்தவொரு மத நம்பிக்கையின் பெயரால் வன்முறை நிகழ்த்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் அண்மையில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வானொலியில் மாதம்தோறும் உரையாற்றும் "மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
நம்முடைய நாடு, அகிம்சையைப் போதித்த புத்தர் மற்றும் காந்தியின் நாடாகும். பி.ஆர்.அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட அரசியல்சாசனமானது அனைத்து வகை குறைகளுக்கும் தீர்வளிக்கக் கூடியதாகவும், அனைவருக்கும் நீதி வழங்குவதாகவும் உள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்காக அனைத்தையும் இழந்த சர்தார் வல்லபபாய் படேல் வாழ்ந்த மண் இது. பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் சமூக மதிப்பீடுகள், அகிம்சை, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை தங்களின் பண்புகளாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இவை நமக்குப் பாரம்பரியமாக வந்துள்ளன.
அகிம்சைதான் பெரிய மதமாகும். செங்கோட்டையில் இருந்து நான் சுதந்திர தின உரையாற்றும்போது, "மத நம்பிக்கையாக இருந்தாலும் சரி, அரசியல் சித்தாந்த ரீதியிலான நம்பிக்கை மற்றும் ஒரு தனிநபர் அல்லது மரபுகள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையாக இருந்தாலும் சரி, அதன் பெயரால் வன்முறை நிகழ்த்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது' என்று கூறியிருந்தேன்.
நம்பிக்கை என்ற பெயரில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது. சட்டத்தைக் கையில் எடுத்து வன்முறைப் பாதையில் செல்வது ஒரு தனிநபரோ, ஒரு அமைப்போ எதுவாக இருந்தாலும் அதை இந்த நாடும், அரசும் சகித்துக் கொள்ளாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் பணிந்து சென்றாக வேண்டும். பொறுப்புடமையை சட்டம் நிர்ணயிக்கிறது. குற்றவாளி எந்தக் கேள்விக்கும் இடமின்றி தண்டிக்கப்படுவார்.
ஒருபுறம், நம் நாடு பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடும் தருணத்தில் உள்ளது. மறுபுறம், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் வன்முறை தொடர்பான செய்தி வருவது கவலையளிக்கிறது என்று மோடி தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள ஆசிரியர் தினம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான அந்த நாளில் "சீர்திருத்தம் செய்வதற்காக கற்பிப்போம்' என்ற உறுதிமொழியை மக்கள் ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, தூய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாவது:
67 சதவீத மக்களுக்கு கழிவறை வசதி: சுத்தத்தைப் பராமரிப்பதற்காக நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் மூன்றாவது ஆண்டு தினம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஆக்கபூர்வமான பலன்கள் தற்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன.
நாட்டில் உள்ள 39 சதவீத மக்களுக்கு மட்டுமே கழிவறை வசதிகள் இருந்தன. அது தற்போது 67 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்காத பகுதிகள் என்று 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டுள்ளன. வரும் காந்தி ஜெயந்தி விழாவானது "தூய்மை அக்டோபர் 2' என்று கொண்டாடப்பட வேண்டும்.
இந்த நோக்கில் "தூய்மையே சேவை' என்ற உறுதிமொழியை வரும் செப்டம்பர் 15-இல் இருந்து ஏற்போம். தூய்மையை நோக்கி மற்றுமோர் அடியை எடுத்து வையுங்கள். அதன் ஒரு பகுதியாக உங்கள் முயற்சியையும் சேருங்கள். அதன் மூலம் இந்த காந்தி ஜெயந்தி எவ்வாறு ஒளிர்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.
30 கோடி குடும்பங்களுக்கு ஜன் தன் வங்கிக் கணக்குகள்: ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்துடன் 30 கோடி புதிய குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.
ஜன் தன் திட்டத்தின் கீழ் வசதியற்றவர்கள் மூலம் வங்கிகளில் ரூ.65,000 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஒரு வகையில், இது ஏழைகளுக்கான சேமிப்பாகும். எதிர்காலத்தில் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் இது.
ஒற்றுமைக்கு உதாரணமான முஸ்லிம் அமைப்பு: குஜராத்தில் அண்மையில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய வெள்ளம் ஏற்பட்டது. அதில் பலரும் உயிரிழந்தனர். அங்கு வெள்ள நீர் வடிந்த பிறகு எங்கு பார்த்தாலும் சேறும், சகதியுமாகக் காணப்பட்டது. பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தானேரா பகுதியில் அவ்வாறு சேற்றால் பாதிக்கப்பட்டிருந்த 22 கோயில்களையும், 2 மசூதிகளையும் ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் என்ற அமைப்பு திட்டமிட்ட முறையில் சுத்தப்படுத்திக் கொடுத்தது. ஜாமியத் அமைப்பின் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி இதைச் சாதித்தனர். அந்தத் தொண்டர்கள் தூய்மைக்கான ஒற்றுமையின் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தினர்.
இந்தியப் பண்டிகைகள் இயற்கையோடு நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன. விநாயகர் சதுர்த்தி, சமண சமூகத்தினரின் சம்வத்சரி, கேரளத்தில் ஓணம், குஜராத்தில் நவராத்திரி, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை, ஈத்-உல்-சுஹா போன்ற பல்வேறு பண்டிகைகள் விவசாயிகளுடன், மீனவர்களுடனும் சம்பந்தப்பட்டுள்ளன. இந்தப் பண்டிகைகளையொட்டி எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com