மீண்டும் மகா கூட்டணி: சரத் யாதவ் உறுதி

"வரும் 2019-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்க தேசிய அளவில் மீண்டும் ஒரு மகா கூட்டணி உருவாக்கப்படும்'
பிகார் தலைநகர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தித் தலைவர் சரத் யாதவை ஆரத்தழுவி வரவேற்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்.
பிகார் தலைநகர் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தித் தலைவர் சரத் யாதவை ஆரத்தழுவி வரவேற்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்.

"வரும் 2019-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்க தேசிய அளவில் மீண்டும் ஒரு மகா கூட்டணி உருவாக்கப்படும்' என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் உறுதிபூண்டுள்ளார்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, சரத் யாதவ் இதனைத் தெரிவித்தார்.
வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் லாலு பிரசாத் ஈடுபட்டுள்ளார்.
அதற்கான தொடக்கமாக, பாட்னா நகரில் உள்ள காந்தி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டத்துக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பொதுக் கூட்டத்தில், கலந்து கொள்ள வேண்டாம் என்று சரத் யாதவுக்கு ஜேடியு மூத்த தலைவர் கே.சி.தியாகி கடிதம் எழுதியிருந்தார். ஒருவேளை அவர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டால், கட்சியில் இருந்து அவர் தாமாக விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என்றும் கே.சி.தியாகி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அந்தக் கடிதத்தைப் பொருள்படுத்தாமல், லாலு பிரசாதின் பொதுக் கூட்டத்தில் சரத் யாதவ் கலந்து கொண்டார். அவருடன் ஜேடியுவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. அலி அன்வரும் வந்திருந்தார். பிகாரில் மகா கூட்டணியில் இருந்து ஜேடியு விலகிய பிறகு, லாலு பிரசாத்தும், சரத் யாதவும் ஒரே மேடையில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். சரத் யாதவை, லாலு பிரசாத் ஆரத் தழுவி வரவேற்றார். கூட்டத்தில் சரத் யாதவ் பேசியதாவது:
வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்கடிக்கப்படும். இந்த தேசத்தில் இருந்தே பாஜக அகற்றப்படும். அதற்காக, தேசிய அளவில் மீண்டும் ஒரு மகா கூட்டணி உருவாக்கப்படும்.
இதை, பிகாரில் மகா கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.(பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்).
மாநிலத்தில், ஜேடியு- ஆர்ஜேடி-காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற மகா கூட்டணியை முறித்துக் கொண்டு ஜேடியு வெளியேறியது, இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். இந்த மாநில மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறிய செயலாகும். பிகார் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
எனவே, மீண்டும் ஒரு மகா கூட்டணியை உருவாக்குவேன் என்பதை உறுதிபடக் கூறுகிறேன். 125 கோடி மக்களுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்ய இருக்கிறேன். இந்த முறை உருவாகும் கூட்டணி, மக்கள் மத்தியில் மாறுபட்ட பார்வையை உருவாக்கும்.
மதத்தையும், அரசியலையும் கலப்பது அபாயகரமானதாகும். அப்படி இரண்டும் கலந்தால், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளைப் போன்று பிரச்னைகள் உருவாகும்.
நான் 43 ஆண்டுகளாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். பிளவுபடுத்தும் சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு போராடத் தயங்க மாட்டேன். எனது இறுதிமூச்சு வரை போராடுவேன் என்றார் சரத் யாதவ்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், கட்சியின் பொதுச் செயலர் சி.பி.ஜோஷி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவர் பாபுலால் மாரண்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராஷ்ட்ரீய லோக்தளம், திமுக, மதச் சார்பற்ற ஜனதா தளம், புரட்சிகர சோஷலிச கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மகள் மிஸா பாரதி ஆகியோர் மேடையில் முன் வரிசையில் அமர்ந்து, கூட்டத்துக்கு வந்த பிற கட்சித் தலைவர்களை வரவேற்றனர்.
பிகார் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படிருந்தபோதிலும், இந்த பொதுக் கூட்டத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com