கோவாவில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மனோகர் பாரிக்கர், விஸ்வஜித் ராணே வெற்றி

கோவா மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் முதல்வர் மனோகர் பாரிக்கர், சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கோவாவில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மனோகர் பாரிக்கர், விஸ்வஜித் ராணே வெற்றி

கோவா மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் முதல்வர் மனோகர் பாரிக்கர், சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கோவா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடைந்தபிறகு, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டது. இதையடுத்து, மத்திய அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த பாரிக்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மாநில அரசியலுக்கு திரும்பினார். மாநில முதல்வராகவும் அவர் பொறுப்பேற்றார். பின்னர் அவர் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு வசதியாக, பனாஜி தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சித்தார்த் குன்கோலிங்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வால்போய் தொகுதி எம்எல்ஏ விஸ்வஜித் ராணே, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பனாஜி, வால்போய் ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் பாஜக சார்பில் பாரிக்கர் மற்றும் விஸ்வஜித் ராணே ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் கிரிஷ் சோடங்கர், ராய் நாயக் ஆகியோரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
பனாஜி தொகுதியில் பாரிக்கருக்கு 9,862 வாக்குகள் கிடைத்தன. சோடங்கருக்கு 5,059 வாக்குகள் கிடைத்தது. இதன்மூலம், பனாஜி தொகுதியில் 4,803 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிக்கர் வெற்றி பெற்றார். வால்போய் தொகுதியில், விஸ்வஜித் ராணே 10,066 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப் பேரவையில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
தேர்தலில் கிடைத்துள்ள வெற்றிக்கு பாரிக்கர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னை வெற்றி பெறச் செய்த பனாஜி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்; 2012ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மீண்டும் திரும்பியுள்ளது. இடைத் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு தார்மீக ரீதியில் சக்தியை அளித்துள்ளது' என்றார்.
பாரிக்கருக்கு பிரதமர் வாழ்த்து: இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரிக்கருக்கும், ராணேவுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "பனாஜி மற்றும் வால்போய் இடைத் தேர்தலில் கிடைத்துள்ள முத்திரை பதிக்கும் வெற்றிகளுக்காக, பாரிக்கர், விஸ்வஜித்துக்கு எனது வாழ்த்து; அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்த கோவா மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவா சட்டப் பேரவையில் காங்கிரஸூக்கு 16 எம்எல்ஏக்களும், கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தலா 3 எம்எல்ஏக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். இதுதவிர 3 சுயேச்சைகளும் எம்எல்ஏக்களாக உள்ளனர்.
கோவாவை ஆளும் பாரிக்கர் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு, கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக கட்சி, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோர் ஆதரவு அளிக்கின்றனர். அதாவது, பாஜக கூட்டணி அரசுக்கு மொத்தம் 23 எம்எல்ஏக்களின்ஆதரவு உள்ளது.

ஆந்திர இடைத் தேர்தல்: தெலுங்கு தேசம் வெற்றி

ஹைதராபாத், ஆக.28: ஆந்திர மாநிலம், நந்தியால் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.
நந்தியால் தொகுதி தெலுங்கு தேசம் எம்எல்ஏவாக இருந்த பூமா நாஹி ரெட்டி கடந்த மார்ச் மாதம் மரணமடைந்ததையடுத்து, அத்தொகுதிக்கு கடந்த 23ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பூமா பிரம்மானந்த ரெட்டிக்கு 97,076 வாக்குகள் கிடைத்தன. ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஷில்பா சந்திர மோகன் ரெட்டிக்கு 69,610 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, 27,466 வாக்குகள் வித்தியாசத்தில் பூமா பிரம்மானந்த ரெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com