டோக்கா லாம்: பின்வாங்கியது சீனா

டோக்கா லாம் எல்லைப் பகுதியில் மோதல் போக்கைக் கைவிடுவது தொடர்பாக இந்தியாவுடன் சீனா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
டோக்கா லாம்: பின்வாங்கியது சீனா

டோக்கா லாம் எல்லைப் பகுதியில் மோதல் போக்கைக் கைவிடுவது தொடர்பாக இந்தியாவுடன் சீனா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு சீனாவில் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், டோக்கா லாம் விவகாரத்தில் நல்லதொரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. டோக்கா லாம் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமைகொண்டாடுவதில் இருந்து பின்வாங்கியுள்ள சீனா, இந்தியாவுடன் சமரசம் செய்து கொண்டுள்ளது.
சீன ராணுவம் விலகியது?: எனினும், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் தங்களது வீரர்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என்று சீனா தெரிவித்துள்ளதால், டோக்கா லாமை விட்டு இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலகுவார்களா என்பது குறித்து குழப்பம் நீடித்து வருகிறது.
"எனினும், பிரச்னைக்குரிய இடத்தின் அருகே குவிக்கப்பட்டிருந்த சுமார் 1,,800 சீன ராணுவ வீரர்கள் ஒப்பந்தப்படி தங்கள் நாட்டு எல்லைக்குள் திரும்பிவிட்டார்கள். சாலை அமைப்பதற்காக கொண்டு வந்த புல்டோசர்களை அவர்கள் அப்புறப்படுத்தி விட்டனர். அப்பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அமைத்திருந்த முகாம்களையும் அவர்கள் அகற்றிவிட்டனர்' என்று பெயர் வெளியிட விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தூதரக அளவில் பேச்சு: இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டோக்கா லாம் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வந்தாலும், அந்த விவகாரம் குறித்து இரு நாடுகளும் தூதரக அளவில் தொடர்ந்து பேசி வந்தன.
இனி மோதல் போக்கு இல்லை: இதன் காரணமாக, அந்த விவகாரம் தொடர்பான இந்தியாவின் கருத்துகளையும், கவலைகளையும் எங்களால் சீன அதிகாரிகளிடம் தொடர்ந்து வெளிப்படுத்த முடிந்தது.
இந்த அடிப்படையில், பதற்றம் நிலவி வந்த டோக்கா லாம் எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதல் போக்கைக் கைவிட்டு சகஜ நிலைமைக்குத் திரும்புவதற்கான ஒப்பந்தம் இருநாடுகளிடையே செய்துகொள்ளப்பட்டு, அது தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதற்றம் தணிந்தது: தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிப்பதற்கான செயல்முறைகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
சீனாவின் அறிவிப்பு: முன்னதாக, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டோக்கா லாம் பகுதியிலிருந்து இந்திய வீரர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். சீன வீரர்கள் தங்கள் தேசத்தின் இறையாண்மையைக் காக்கும் பணியிலும், பிராந்திய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றார் அவர்.
எனினும், சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா மேற்கொண்டு வந்த சாலை அமைக்கும் பணிகள் தொடரப்படுகிறதா என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அந்த முயற்சி கைவிடப்படுகிறது என்பதை அவர் மறைமுகமாகத் தெரிவித்துவிட்டார் என்றே கருதப்படுகிறது.
ராணுவம் திரும்பவில்லை: சீனாவுக்குச் சாதகமான வகையில், சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியிலிருந்து இந்திய வீரர்கள் திருப்பி அழைக்கப்படவில்லை என்று இந்தியா மறுப்பு தெரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், "டோக்கா லாமிலிருந்து பின்வாங்கி, இந்திய வீரர்களை மட்டும் திரும்ப அழைக்க வேண்டுமென்றால், அதற்காக சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றார். இதனால், இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.
பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு...: பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு, சீனாவின் ஜியாமென் நகரில் அடுத்த மாதம் (செப்.) 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாதம் நீடித்த பிரச்னை முடிந்தது: இந்தியா-பூடான்- சீனா எல்லையில் சிக்கிம் மாநிலத்தையொட்டி டோக்கா லாம் பகுதி அமைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அங்கு சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இரு தரப்பின் படைக் குவிப்பால் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தூதரக அளவில் பேச்சுகளும் தொடங்கின. இதன் விளைவாக இப்போது டோக்கா லாம் விவகாரத்தில் மோதல் போக்கைக் கைவிட இந்தியாவுடன் சீனா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com