ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டு சிறை; ரூ.30 லட்சம் அபராதம்

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டு சிறை; ரூ.30 லட்சம் அபராதம்

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், தலா 10 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக, ராம் ரஹீம் (50) அடைக்கப்பட்டுள்ள ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டம் சுனாரியா சிறையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற அறை உருவாக்கப்பட்டது. அங்கு அவருக்கு இந்த தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
ஹரியாணா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா செளதா அமைப்பின் தலைமையகம் உள்ளது. இங்கு கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் பக்தர்களை ராம் ரஹீம் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி என்பதை பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஹரியாணாவிலும், பஞ்சாபிலும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 38 பேர் உயிரிழந்துவிட்டனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் கலவரக் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் ஹரியாணா மாநிலத்தில்தான் பெருமளவில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்தைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மாநில அரசு மீது குற்றச்சாட்டும் உள்ளது.
ஹெலிகாப்டரில் வந்த நீதிபதி: ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறையிலேயே தீர்ப்பை வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிறையைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீர்ப்பை வழங்குவதற்காக சண்டீகரில் இருந்து நீதிபதி ஜக்தீப் சிங், ஹெலிகாப்டரில் வந்தார். சிறைக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டிருந்தது.
சிறையில் நீதிமன்ற அறை: சிறையில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற அறையில் சிபிஐ தரப்பு மற்றும் ராம் ரஹீம் தரப்பின் தண்டனை குறித்த வாதங்களை நீதிபதி ஜக்தீப் சிங் கேட்டறிந்தார். பின்னர், இரு பெண்களை பலாத்காரம் செய்ததற்காக ராம் ரஹீமுக்கு தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதிப்பதாக தனது தீர்ப்பை அவர் அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம்: சிறைத்தண்டனையை ராம் ரஹீம் அடுத்தடுத்து, அதாவது தொடர்ந்து 20 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் அபராதத் தொகையில் தலா ரூ.14 லட்சம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கண்ணீர் வடித்த ராம் ரஹீம்: தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட போது, ராம் ரஹீம் கண்ணீர் விட்டு அழுதார். நீதிபதியை நோக்கி கைகூப்பி வணங்கிய அவர், தான் அப்பாவி என்றும், தன்னை வேண்டுமென்றே சிக்கவைத்துவிட்டதாகவும் முறையிட்டார் என்றும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு, அவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டு சிறை உடைகள் அளிக்கப்பட்டன. அவருக்கான சிறை அறையும் ஒதுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com