வெறிச்சோடியது கஷ்மீரி கேட் பேருந்து நிலையம்: குர்மீத் மீதான தீர்ப்பு எதிரொலி

பாலியல் வழக்கில் தேரா சச்சா செளதா  அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக தீர்ப்பின் தண்டனை விவரம்  வெளியானதைத் தொடர்ந்து

பாலியல் வழக்கில் தேரா சச்சா செளதா  அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக தீர்ப்பின் தண்டனை விவரம்  வெளியானதைத் தொடர்ந்து ஹரியாணாவுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் கஷ்மீரி கேட் பேருந்து நிலையம் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

பாலியல் வழக்கில் தேரா சச்சா செளதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் தண்டனை விவரங்கள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.  

குர்மீத் மீதான தீர்ப்பு வெளியான நாளில் ஹரியாணா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் கலவரம் வெடித்தது. இந்நிலையில், தீர்ப்பு விவரம் வெளியிடப்பட்ட திங்கள்கிழமை காலை முதலே கஷ்மீரி கேட் பேருந்து நிலையத்தில் ஹரியாணா, பஞ்சாப், சண்டீகர் மாநிலங்களுக்கு  குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டன. இருப்பினும், வழக்கமான அளவில் பயணிகள் இல்லை. இதனால், பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கஷ்மீரி கேட் பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரி கூறுகையில், "ஹரியாணா, பஞ்சாப், சண்டீகர் மாநிலங்களுக்கு வழக்கமாகச் செல்லும் பயணிகள் கூட்டம் திங்கள்கிழமை காணப்படவில்லை.  ஞாயிற்றுக்கிழமை  மாலையில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கினாலும், அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.  சண்டீகர், ஜலந்தர் ஆகிய நகரங்களுக்கான பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.  ஹிமாச்சல பிரசேதம், ஜம்மு-காஷ்மீர் செல்லும் பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட்டன. இருப்பினும்  பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதிய ஏராளமான பயணிகள் கஷ்மீரி கேட் பேருந்து நிலையத்துக்கு வரவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com