ஜேட்லி, நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

தில்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (மீன்வளத் துறை) , பி. தங்கமணி (மின் துறை), சி.வி. சண்முகம் (சட்டத் துறை)
ஜேட்லி, நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

தில்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (மீன்வளத் துறை) , பி. தங்கமணி (மின் துறை), சி.வி. சண்முகம் (சட்டத் துறை) உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனர்.
தமிழக அமைச்சர்களுடன், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் திங்கள்கிழமை தில்லி வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைந்துள்ள நிலையில், அதிமுக சின்னம், பெயரை மீட்பதற்காக ஆலோசனை நடத்துவதற்காக இவர்கள் தில்லி வந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் தமிழக அமைச்சர்கள் மூவர், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்புக் குறித்து தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க நாங்கள் வந்திருப்பதாகக் கூறுவது தவறு. மத்திய அமைச்சர்களை மாநில அமைச்சர்கள் சந்தித்து துறை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவது வழக்கமான ஒன்றுதான். அதுபோன்றுதான் மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினோம். வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை' என்றார்.
பின்னர், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது நார்த் பிளாக் அலுவலகத்தில் மு.தம்பிதுரை தலைமையில் தமிழக அமைச்சர்கள் மூவரும் நேரில் சந்தித்துப் பேசினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது:
தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து பல்வேறு துறைகள் மூலமாக ரூ.17 ஆயிரம் கோடி நிதி வர வேண்டியுள்ளது. அதைப் பெறுவது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அவரும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார். அவருடன் அரசியல் குறித்துப் பேசவில்லை. அதேபோன்று, வர்த்தகத் துறை அமைச்சர் என்ற முறையில் நிர்மலா சீதாராமனிடம் துறை ரீதியாக அமைச்சர்கள் பேசினர்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மட்டுமே கட்சியின் விவகாரங்கள் குறித்து முடிவு எடுப்பார்கள். குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு கொடுக்க திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் குடியரசுத் தலைவரை சந்திப்போம் என்றார் தம்பிதுரை.

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா?
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா? என்பது குறித்து மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன் விளக்கமளித்தார். இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: தமிழக அரசியல் சூழ்நிலை, தேர்தல் ஆணையத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள மனு, பிரமாணப் பத்திரங்கள், அதனுடைய நிலைப்பாடு ஆகியவை குறித்து சட்ட வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் வல்லுநர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்து பேசுவதற்காக தில்லி வந்துள்ளோம். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது என்பது என் கருத்து. அது குறித்து பிரதமரும், முதல்வரும், துணை முதல்வரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். அதற்காக நாங்கள் தில்லி வந்ததாகக் கூறுவது தவறு. தமிழகத்தில் உள்ளாட்சி உள்ளிட்ட எந்தத் தேர்தலையும் சந்திக்க அதிமுக அரசு தயாராக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் கட்சி விவகாரத்தில் இறுதி முடிவை நாங்கள்தான் எடுப்போம். அதற்கு முன்பாக பல தரப்பினரிடமும் கருத்துக் கேட்போம். இதில் தவறும் ஏதும் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com