துணிச்சலுடன் முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி

மத்திய அரசு துணிச்சலுடன் முடிவெடுத்து, தீர்மானத்துடன் அதனை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிறார் பிரதமர் மோடி.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிறார் பிரதமர் மோடி.

மத்திய அரசு துணிச்சலுடன் முடிவெடுத்து, தீர்மானத்துடன் அதனை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அருகே கேல்கோனில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தொடக்கவிழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 873 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட 11 தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு மோடி அர்ப்பணித்தார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபோது அரசு நிர்வாகம் முடங்கிக் கிடந்தது. முந்தைய அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் ஸ்திரமற்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பதுடன், அதனைத் தீர்மானத்துடன் செயல்படுத்தி வருகிறோம்.
ஆட்சி அமைக்கும்போது நிர்வாகத்தில் இருந்த சூழ்நிலையை வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால் திகைத்துப் போயிருப்பார்கள். 
ஆனால், நாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அரசு நிர்வாகத்தில் இருந்த சவால்களை துணிவுடன் எதிர்கொண்டோம். பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்ததுடன், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
நாங்கள் தொடங்கிய வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும், முழுமையாக நிறைவடையச் செய்ய உறுதி எடுத்துள்ளோம். ராஜஸ்தானில் இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாநிலத்தில் வேளாண்மை, தொழில்துறை, சுற்றுலா ஆகிய துறைகள் மேம்படும்.
தேர்தலின்போது அடுக்கடுக்காக வாக்குறுதிகளை அளிப்பது தேர்தல் தோறும் நடைபெறுவதுதான். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு தீயசக்திகளை அழிப்பதற்கு மிகப்பெரிய பலம் தேவை. எங்கள் அரசு நிர்வாகத்தை முழு அளவில் வேகப்படுத்தியுள்ளது என்றார் மோடி.
ஜிஎஸ்டி தனிச்சிறப்பு வாய்ந்த மறுமலர்ச்சி: சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது குறித்துப் பேசிய மோடி, 'ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் மூலம் நாட்டில் ஒரே இரவில் தனிச்சிறப்பு வாய்ந்த மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
ஜிஎஸ்டி-யால் சரக்குப் போக்குவரத்து செலவு வெகுவாகக் குறைந்துள்ளது. லாரி, டிராக்டர் ஓட்டுநர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. நாட்டின் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்றார்.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்ட பணிகளை, மோடி அரசு 3 ஆண்டுகளில் முடித்துள்ளது. கடந்த ஆட்சியில் அரசின் உள்கட்டமைப்புப் பணிகள், நடைமுறைச் சிக்கல்களால் தாமதப்பட்டு கிடந்தன. 
மோடி அரசு அதனை மாற்றி அரசின் செயல்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. முந்தைய அரசு முடிவுகளை எடுப்பதில் தேவையற்ற காலதாமத்தை ஏற்படுத்தி வந்தது. இப்போது நாங்கள் 3 ஆண்டுகளில் 57 உள்கட்டமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com