வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை : ரயில், சாலை, விமானப் போக்குவரத்து பாதிப்பு

நாட்டின் பொருளாதாரத் தலைநகராகக் கருதப்படும் மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை கன மழை பெய்தது.
வெ‌ள்ள நீ‌ர் சூ‌ழ்‌ந்த சாû‌லயை த‌த்​த​ளி‌த்​த​படி கட‌க்​கு‌ம் பொது​ம‌க்​க‌ள் ம‌ற்​று‌ம் வாக​ன‌‌ங்​க‌ள்.
வெ‌ள்ள நீ‌ர் சூ‌ழ்‌ந்த சாû‌லயை த‌த்​த​ளி‌த்​த​படி கட‌க்​கு‌ம் பொது​ம‌க்​க‌ள் ம‌ற்​று‌ம் வாக​ன‌‌ங்​க‌ள்.

நாட்டின் பொருளாதாரத் தலைநகராகக் கருதப்படும் மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை கன மழை பெய்தது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
மும்பை நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழை பெய்வது வழக்கம். அதன்படி, அங்கு திங்கள்கிழமை இரவும், செவ்வாய்க்கிழமையும் கன மழை பெய்தது. இதனால் மும்பை, நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
லோயர் பரேல், தாதர், குர்லா, அந்தேரி, காட்கோபர், சையன், ஹிந்த்மாதா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள், கிழக்கு மற்றும் மேற்கு விரைவு நெடுஞ்சாலைகள், சையன்-பன்வல் நெடுஞ்சாலை, எல்பிஎஸ் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதலே தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக முழங்கால் முதல் இடுப்பளவுக்கு நீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மும்பையிலும் அதையொட்டிய பகுதிகளிலும் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் மேற்கு, மத்திய மற்றும் துறைமுகம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் புறநகர் ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
தாதர், அந்தேரி, வோர்லி, குர்லா, சாகிநாகா, உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 20 மரங்கள் விழுந்துள்ளன. ஓரிடத்தில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
மழை காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றடைய வேண்டிய பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்தனர்.
விமானச் சேவை பாதிப்பு: கன மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மும்பை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களால் அங்கு தரையிறங்க முடியவில்லை. அவை மும்பைக்கு அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
முதல்வர் ஆலோசனை: மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையல் கன மழையால் மும்பை நகரின் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனினும் நிலைமையை சீராக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மழை வெள்ள நிலைமை மேம்படும் வரை மும்பை நகர எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளிலும், பாந்த்ரா-வோர்லி சாவடியிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றார்.
ஃபட்னவீஸுடன் மோடி, ராஜ்நாத் ஆலோசனை: இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸுடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் தொலைபேசி மூலம் மும்பையில் கன மழையால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். மாநில அரசுக்குத் தோவையான அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

மழைக்கு பெண், சிறுமி பலி
தாணே நகரில் மழை, வெள்ளத்தால் ஒரு பெண்ணும், சிறுமியும் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பேரிடர் மீட்புக் குழுவினர் கூறியதாவது:
தாணேயின் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சைனத் சாஹித் (32), சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மழையால் ஏற்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துவிட்டார். அப்பகுதியில் மழை நீர் நிரம்பி ஓடியதால் அங்கிருந்த பள்ளம் வெளியே தெரியவில்லை. அதில் தவறி விழுந்த அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை.
மற்றொரு சம்பவத்தில் வணிக மையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மழைநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
மேலும் மழை பொழியும்
மும்பை உள்பட மகாராஷ்டிரத்தின் மேற்குக் கடலோரப் பகுதிகளிலும், குஜராத், கோவா ஆகியவற்றின் சில பகுதிகளிலும் அடுத்த 24 முதல் 48 மணிநேரத்துக்கு மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து மும்பையில் பள்ளிகளும், கல்லூரிகளும் புதன்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று மகாராஷ்டிர கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் கனமழை: மும்பையில் 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அதிக அளவாக ஆகஸ்ட் மாதத்தில் 298 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1997 ஆகஸ்ட் 23-ஆம் தேதி அதிக அளவாக 346.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மும்பை நகரில் வழக்கமாக ஜுன், ஜூலையில்தான் அதிக அளவில் மழை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்து.
12 ஆண்டுகளுக்குப் பின்....
மும்பையில் கடந்த 2005-இல் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்பைப் போன்ற நிலை 12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஏற்பட்டுள்ளது. 2005-இல் மழை-வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com