டோக்கா லாம்: இந்தியா கடைப்பிடித்த உறுதியால் சீனா பின்வாங்கி விட்டது: சீனாவுக்கான இந்திய முன்னாள் தூதர்

டோக்கா லாம் முற்றுகை விவகாரத்தில், இந்தியா கடைப்பிடித்த உறுதியான அணுகுமுறையினால், சீனா தனது நிலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டு விட்டதாக அந்நாட்டுக்கான

டோக்கா லாம் முற்றுகை விவகாரத்தில், இந்தியா கடைப்பிடித்த உறுதியான அணுகுமுறையினால், சீனா தனது நிலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டு விட்டதாக அந்நாட்டுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான இந்திய தூதராக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் பணியாற்றியவர் அசோக் காந்தா. டோக்கா லாம் முற்றுகைப் பிரச்னை உள்பட சீனாவுடனான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
டோக்கா லாம் முற்றுகை விவகாரத்தில், இந்தியா கடைப்பிடித்த நிலைப்பாடு, இந்தப் பிராந்தியத்தில், சீனாவின் தீவிர போக்குக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. ஏனெனில், தனது மிகப்பெரிய திட்டத்தின் ஒருபகுதியை டோக்கா லாமில் சீனா மேற்கொண்டது.
தென்சீனக் கடல் விவகாரம் போன்று பல்வேறு விவகாரங்களிலும், குறிப்பிட்ட பகுதிகள் மீது தன்னிச்சையாக உரிமைக் கொண்டாடும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. இது ஏதோ புதிய விதி என்ற கோணத்தில், சீனாவின் போக்கை அதன் அருகே இருக்கும் சிறிய நாடுகள் ஏற்றுக் கொண்டன.
ஆனால், சீனாவின் முயற்சி, டோக்கா லாமில் எடுபடவில்லை. சீனாவின் பேச்சை இந்தியாவும், பூடானும் கேட்க மறுத்துவிட்டன. சீனாவின் நடவடிக்கைகளுக்குப் போட்டியாக இந்தியா எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. நிலத்தை ஆக்கிரமிக்கும் சீனாவின் செயலுக்கு இந்தியாவும், பூடானும் அமைதியான முறையிலேயே சவால் விடுத்தன. இதனால், சீனா தனது நிலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டு விட்டது; முந்தைய தனது நிலைக்கே மீண்டும் திரும்பிவிட்டது.
டோக்கா லாம் விவகாரத்தில் போர் ஓர் உபாயமாக இருக்காது என்பதை இந்தியா உணர்ந்து செயல்பட்டது. சீனாவும் பிறகு அதை புரிந்து கொண்டது. இதனால், ஆரம்பத்தில் இந்திய வீரர்கள் வாபஸ் பெறப்படாதவரையிலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று தெரிவித்து வந்த சீனா, பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வந்தது. போர் தொடுக்கப்பட வேண்டும் என்று சீனாவில் எழுந்த குரலிலும் (சீன பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள்) மாற்றம் ஏற்பட்டது. இந்தியா இந்த விவகாரத்தை மிகவும் பக்குமாகவும், முக்கியமான பிரச்னையாகவும் கருதி செயல்பட்டது. இதனால், டோக்கா லாமில் சீனாவை சாலை அமைக்க அனுமதிப்பதில்லை என்ற தனது நோக்கத்தில் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது. டோக்கா லாமில் நிலவிய பதற்றத்தையும் தணிக்க முடிந்தது.
ஒருவேளை, சீனாவின் நிர்ப்பந்தத்துக்கு இந்தியா கட்டுப்பட்டிருந்தால், சீனாவின் பிற சிறிய அண்டை நாடுகளால், அந்நாட்டை எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். மேலும், பூடானிலும், பிறகு மற்ற தெற்காசிய நாடுகளிலும் இந்தியா மீதான நம்பகத்தன்மை போயிருக்கும்.
டோக்கா லாமில் இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறையானது, சீனாவின் தீவிரமான போக்குக்கு எதிராக இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளின் முயற்சிகளை ஊக்கமடையச் செய்யும். அதேபோல், சீன தரப்பிலும் அவர்களது அணுகுமுறையை சுயபரிசோதனை செய்து கொள்ள வழிவகுக்கும் என்றார் அசோக் காந்தா.
தில்லியில் இருக்கும் சீன விவகாரங்களை தொடர்பான கல்வியை அளிக்கும் நிறுவனத்தில் அசோக் காந்தா தற்போது இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com