தில்லியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாசார மையம்: செப்.3-இல் அடிக்கல் நாட்டு விழா

தில்லியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாசார மையத்தின் அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற உள்ளது

தில்லியில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாசார மையத்தின் அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற உள்ளது.
சனாதன வேத தர்மத்தைப் பாதுகாக்கவும், அதன் தத்துவங்களான உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை பரப்பும் நோக்கிலும் இந்தியாவின் மோட்சாபுரிகளில் ஒன்றாக அறியப்படும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை காஞ்சிபுரத்தில் ஜகத்குரு ஆதி சங்கராச்சார்யார் சுவாமிகள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவினார். அவரது வழியைத் தொடர்ந்து 70 ஆச்சார்யார்கள் மக்களின் நலனுக்காக காஞ்சி பீடத்தின் பணிகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சி மடத்தின் தற்போதைய சங்கராச்சார்யார்கள் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் அருளாசியின் பேரில், தில்லியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 1-இல் காஞ்சி மடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாசார மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் பழைமையான பாரம்பரியம் மற்றும் கலாசார மதிப்பீடுகளை பரப்பும் நோக்கில் அமைக்கப்படவுள்ள இந்த மையத்தில் வேதக் கல்வி, நூலகம், மருத்துவ மையம், தியானக் கூடம், அத்வைத தத்துவம் குறித்த சொற்பொழிவு, கலாசாரம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
மேலும், அனைத்து விதமான புனித பண்டிகைகளும் கடைப்பிடிக்கப்பட உள்ளன.
2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கரர் காலத்தில் இருந்து காஞ்சி மடத்தின் ஆச்சார்யர்களால் சந்திர மௌலீஸ்வர பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பூஜைகளை தற்போது அமைக்கப்படவுள்ள கலாசார மையத்தில் ஆச்சார்யர்களின் வருகையின் போது கடைப்பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலாசார மையம் இரு கூடங்களுடன் நான்கு தளங்களைக் கொண்டதாக இருக்கும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு கலச ஸ்தாபனம், புன்யஹாவாசனம், சங்கல்பம் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. காலை 9 மணிக்கு சண்டி ஹோமம், நண்பகல் 12.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.
விழாவில் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானத்தின் மேலாளர் எஸ். சுந்தரேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com