உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி

உத்தரப்பிரதேச உள்ளாட்சி தேர்தலில் ராகுலின் அமேதி தொகுதி நகராட்சி உட்பட பெரும்பாலான இடங்களில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளான 438 நகராட்சிகள், 198 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சிகளுக்கான நவம்பர் 22, 26 மற்றும் 29 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தங்கள் சொந்த சின்னங்களுடன் போட்டியிட்டன. அதிலும் குறிப்பாக 17 வருடங்களுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டது.

22-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 52.59 சதவீதமும், 26-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 49.3 சதவீத வாக்குகளும் பதிவாகின. 3-ஆம் கட்டத் தேர்தலில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின. மூன்று கட்டங்களையும் சேர்த்து மொத்தம் 52.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து டிசம்பர் 1-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக பிரதான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 

மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் வாரணாசி, கோரக்பூர், காசியாபாத், பரேலி, ஆக்ரா, ஃபிரோஸாபாத், அயோத்தி, மதுரா, லக்னோ, கான்பூர், மோராதாபாத் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளை பாஜக வென்றது. இதில் லக்னோ மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பாஜக-வின் சன்யுக்தா பாட்டியா தேர்வாகியுள்ளார். இங்கு கடந்த இரு முறை தொடர்ந்து மேயராக பதவி வகித்த தினேஷ் ஷர்மா, தற்போது உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதர இரு இடங்களான அலிகார் மற்றும் மீரட் மாநகராட்சிகளை பகுஜன் சமாஜ் கட்சி தன்வசப்படுத்தியது. இதில் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுயேட்சைகளாக போட்டியிட்டவர்கள் காங்கிரஸை விட அதிக இடங்களை வென்றுள்ளனர்.

இந்நிலைியல், மதுராவில் உள்ள 56-ஆவது வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் பதிவான மொத்த வாக்குகளில் முறையே 874 வாக்குகளைப் பெற்று சமநிலைப் பெற்றது.

இதையடுத்து வெற்றியாளரைத் தேர்வு செய்யும் விதமாக லக்கி டிரா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மீரா அகர்வாலுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர் அந்த வார்டின் பிரதிநியாக வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார்.

அதுபோன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் சட்டப்பேரவைத் தொகுதியான அமேதி நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

198 பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடத்தில் 47-ல் பாஜக வெற்றிபெற்றது. பகுஜன் சமாஜ் 18, சமாஜ்வாதி 29, காங்கிரஸ் 5 இடங்களில் வென்றன. இதில் மொத்தமுள்ள 5,434 பஞ்சாயத்து உறுப்பினர்கள் இடங்களில் 575-ஐ பாஜக கைப்பற்றியது. சமாஜ்வாதி 384, பகுஜன் சமாஜ் 189 மற்றும் காங்கிரஸ் 106 இடங்களில் வென்றன.

438 நகராட்சி தலைவர்களுக்கான இடத்தில் 81 இடங்களை பாஜக கைப்பற்றியது. சமாஜ்வாதி 67, பகுஜன் சமாஜ் 34, காங்கிரஸ் 15 இடங்களில் வென்றன. இதில் மொத்தமுள்ள 1,300 வார்டுகளில் பாஜக 535-ஐ கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 145, சமாஜ்வாதி 171, காங்கிரஸ் 86 இடங்களில் வெற்றிபெற்றன.

5,261 நகரசபைக்கான இடங்களில் 624-ஐ பாஜக தன்வசப்படுத்தியது. பகுஜன் சமாஜ் 178, சமாஜ்வாதி 328, காங்கிரஸ் 98 இடங்களில் வென்றன. சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் 199 நகராட்சி வார்டுகள், 27 நகராட்சி தலைவர்கள், 2,553 பஞ்சாயத்து உறுப்பினர்கள், 144 பஞ்சாயத்து தலைவர்கள், 3,291 நகரசபைகளை வென்றனர்.

இங்கே வென்றுவிடலாம் என்று பகல் கனவு கண்ட கட்சி காணாமல் போய்விட்டது. இது வளர்ச்சிக்கான வெற்றி. இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதை மீண்டும் நிரூபித்துவிட்டனர். பாஜக அரசின் நலத்திட்டங்களுக்கு அவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட இந்த வெற்றி மேலும் என்னை ஊக்குவிக்கிறது. இது வளர்ச்சிக்கான வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com