2 ஜி வழக்கு: டிச.21-இல் தீர்ப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளின் தீர்ப்பு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தில்லி சிபிஐ
2 ஜி வழக்கு: டிச.21-இல் தீர்ப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளின் தீர்ப்பு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நவம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, 'தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. இதற்கு மேலும் மூன்று வாரங்கள் தேவைப்படுகின்றன. இதனால், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் தேதி குறித்து டிசம்பர் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும். அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராக வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். 
அதற்கு முன்பு இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு சில முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி கூறுகையில், 'இந்த வழக்கில் தொடர்புடைய கோப்புகளை முழுவதும் பார்த்துவிட்டேன். வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வழங்கப்படும். வழக்கில் தொடர்புடைய அனைவரும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்றார்.
இந்த வழக்கு விசாரணையை ஒட்டி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., ஷாகித் பால்வா மற்றும் இரு தரப்பு வழக்குரைஞர்கள் ஆஜராகினர். பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான்தான் 2ஜி வழக்கை ஆரம்பித்தேன். இந்த வழக்கின் தீர்ப்பு தேசத்திற்கு ஆதரவாக வரும். குற்றத்தில் யார் ஈடுபட்டார்களோ அவர்கள் சிறைக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன். இந்த வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது' என்றார். 
நீதிமன்றத்திற்கு வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் இந்த வழக்கில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். நீதித் துறையின் மீதும், விசாரணை நீதிமன்றத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். விசாரணை நீதிமன்றம் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் பார்த்துள்ளது. தீர்ப்பு குறித்து கருத்து ஏதும் கூற விரும்பவில்லை. தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்' என்றார்.
இதேபோல, இந்த வழக்கில் தொடர்புடைய கனிமொழி எம்.பி.யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கருத்துக்கூற மறுத்த அவர், 'தீர்ப்பு வரும் போது பார்க்கலாம்' என்றார்.
அமலாக்கத் துறை வழக்கு
மத்திய அமலாக்கத் துறை தொடுத்துள்ள வழக்கில் ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டோரின்அனைத்துத் தரப்பு வாதங்களும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நிறைவடைந்தது.
பின்னணி
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும் ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் 2011, ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால், மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் (ஏடிஏஜி) தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.மேலும், சிபிஐ தொடுத்துள்ள மற்றொரு வழக்கில் எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி. கேதான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும், அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com