ராமர் கோயில் வழக்கில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

ராமர் கோயில் வழக்கு தொடர்பாக கபில் சிபில் ஆஜரானது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமைகேள்வி எழுப்பினார்.
ராமர் கோயில் வழக்கில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து வழக்கு விசாரணை அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இந்த வழக்கில் ராமர் கோயில் எழுப்பக்கூடாது என்று சுன்னி வக்பு வாரிய அமைப்பின் சார்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இவ்விவகாரம் தொடர்பான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்றது. அப்போது, அயோத்தி வழக்கு விசாரணையை வருகிற 2019-ம் ஆண்டு ஜுலை மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கபில் சிபில் தெரிவித்தார். 

ஆனால், இதனை மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருகிற பிப்ரவரி 8-ந் தேதி இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதனிடையே குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தண்டுகா என்ற இடத்தில் புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தின் போது இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவரக்ளில் ஒருவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபில், இந்த வழக்கினை 2019 வரை ஒத்திவைக்குமாறு அங்கு கோயில் எழுப்ப எதிர்ப்பு தெரிவித்து வரும் அமைப்பின் சார்பாக ஆஜராகி வாதாடியுள்ளார். 

ஒரு வழக்கறிஞராக அவர் எந்த வழக்கிலும் ஆஜராகும் உரிமை உள்ளது. ஆனால், முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் என்ற முறையில் அவருக்கு சில பொறுப்புணர்வு உள்ளது. 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். 

இதன்மூலம் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேட விரும்புகிறது. அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தை விட தங்களின் வளர்ச்சியில் தான் அதிக அக்கறை உள்ளது. சமீபகாலங்களில் கோயில்களுக்கு யாத்திரை செல்லும் ராகுல், இந்த விவகாரத்தில் அவருடைய கருத்தினை தெரிவிக்க வேண்டும். அவரின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதனிடையே, கபில் சிபிலின் இந்த நடவடிக்கைகளில் இருந்து காங்கிரஸ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது. "கபில் சிபிலின் இந்த நடவடிக்கையில் காங்கிரஸுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது அவரது தனிப்பட்ட விருப்பம்" என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com