என் விருப்பமனு நிராகரிப்புக்கு சோனியா, ராகுல் மீது வருத்தமில்லை: அயூப் அலி

காங்கிரஸ் தலைவர் பதிவக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் வருத்தமில்லை என்று அக்கட்சியைச் சேர்ந்த அயூப் அலி, வியாழக்கிழமை தெரிவித்தார்.
என் விருப்பமனு நிராகரிப்புக்கு சோனியா, ராகுல் மீது வருத்தமில்லை: அயூப் அலி

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வுசெய்வதற்கான கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தலைவர்கள் பலர் ராகுலின் பெயரை பரிந்துரை செய்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் செல்லப்பிள்ளை ராகுல் என்று முன்னாள் பிரமதர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், அக்கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட 89 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். இந்நிலையில், தனது வேட்பமனுவை காங்கிரஸ் தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே நிராகரித்ததாக அக்கட்சியைச் சேர்ந்த அயூப் அலி என்பவர் திடீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 89 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். ஆனால் எனது மனுவை மட்டும் தேர்தல் பிரிவு அதிகாரியான ராமச்சந்திரன் வேண்டுமென்றே நிராகரித்தார். ஆனால், அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. 

இவ்விவகாரத்தை நான் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் தன்மானம் எனக்கு மிக முக்கியம். மேலும் இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 

காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், எதற்காக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது என்றுதான் புரியவில்லை என்றார்.

இவ்விகாரம் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பிரிவு அதிகாரி ராமச்சந்திரன் கூறியதாவது:

டிசம்பர் 4-ந் தேதிக்கு முன்னதாக எந்த மனுவும் ஏற்கப்படவில்லை. மேலும், அயூப் அலி தாக்கல் செய்த மனுவும் சரியானது இல்லை. படிவம் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருந்தது. ஆனால் அவர் வழங்கிய படிவம் ஹிந்தியில் இருந்தது. மேலும் அதில் எனது கையெழுத்தும் இல்லை. அவர் சுய விளம்பரத்துக்காக வேண்டுமென்றே குற்றச்சாட்டினை முன்வைக்கிறார் என்றார்.

முன்னதாக, மஹாராஷ்டிர காங்கிரஸ் பிரிவு செயலாளர் செஷாத் பூண்வாலா, கடந்த 29-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜனநாயக முறையில் இல்லை என்று விமர்சித்திருந்தார். அதிலும், துணைத் தலைவர் பதிவியில் இருந்து ராஜிநாமா செய்யமாலேயே ராகுல், தலைவர் பதவிக்கான விருப்பமனுவை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com