அயோத்தி வழக்கு விசாரணை: பிரதமரின் விமர்சனத்துக்கு காங். பதிலடி

அயோத்தி வழக்கு விசாரணையில் கபில் சிபலின் வாதத்தை விமர்சித்துள்ள பிரதமர் மோடி, போபால் விஷ வாயுச் சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனம் சார்பில் மத்திய அமைச்சர் ஜேட்லி ஆஜரானது

அயோத்தி வழக்கு விசாரணையில் கபில் சிபலின் வாதத்தை விமர்சித்துள்ள பிரதமர் மோடி, போபால் விஷ வாயுச் சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனம் சார்பில் மத்திய அமைச்சர் ஜேட்லி ஆஜரானது குறித்து எதுவும் பேசாதது ஏன்? காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பளித்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரேதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
அதில் சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்குரைஞருமான கபில் சிபல் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது வாதிட்ட அவர், 'வரும் 2019-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரை அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.
இதை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியும் வழக்குரைஞர்தான். போபால் விஷ வாயுச் சம்பவத்தில் தொடர்புடைய 'டவ் கெமிக்கல்' நிறுவனம் சார்பில் ஆஜராகி அவர் வாதிட்டது ஏன்? என்று இதுவரை பிரதமர் கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால், கபில் சிபலின் வாதத்தை அவர் விமர்சிக்கிறார். கபில் சிபலை நேரிலேயே பிரதமர் அழைத்து 'ஒரு கோப்பை தேநீருடன்' இதுதொடர்பாக பேசலாம் என்றார் ஆனந்த் சர்மா.
வக்ஃபு வாரியம் முரண்பட்ட கருத்து: இதனிடையே, உத்தரப் பிரதேச சன்னி வக்ஃபு வாரியமானது, அயோத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு கபில் சிபலிடம் நாங்கள் வலியுறுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com