அயோத்தி வழக்கை ஒத்திவைக்கக் கோருவதா?: கபில் சிபல் மீது மோடி தாக்கு

பாபர் மசூதி-ராமஜெமன்ம பூமி தொடர்பான வழக்கின் விசாரணையை, வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த காங்கிரஸ் மூத்த
குஜராத் மாநிலம், ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள தண்டுகா கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள தண்டுகா கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி.

பாபர் மசூதி-ராமஜெமன்ம பூமி தொடர்பான வழக்கின் விசாரணையை, வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபலை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்
தேர்தல் ஆதாயத்துக்காக, ஒரு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் நிலுவையில் வைத்திருக்க வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள தண்டுகா என்ற இடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி மேலும் பேசியதாவது:
பாபர் மசூதி-ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது, சன்னி வக்ஃபு வாரியம் சார்பில் கபில் சிபல் வாதாடினார். நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. பாபர் மசூதியைக் காப்பதற்காக, சட்ட விதிகளையும், உண்மைகளையும் அவர் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கலாம். ஆனால், வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரை, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அவர் கோருகிறார். நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றும் அவர் வாதிடுகிறார்.
அப்படியானால், பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.
மக்களவைத் தேர்தலில், வக்ஃபு வாரியம் போட்டியிடவில்லை; காங்கிரஸ் கட்சிதான் தேர்தலை சந்திக்கிறது. தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வக்ஃபு வாரியம் முன்வைக்கிறதா? அல்லது தேர்தல் ஆதாயத்துக்காக, வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறதா?
இதேபோன்று ஒரு சூழலை, உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின்போது சந்தித்தேன். முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அரசின் வாதம் தெளிவாக முன்வைக்கப்பட்டது. அதையடுத்து, முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் வகையில் 6 மாதங்களில் சட்டமியற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
அந்த விவகாரத்தில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக, கருத்து தெரிவித்திருந்தால், அது உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். 
எந்த முடிவையும், நாட்டு நலனுக்காக எடுக்க வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயத்துக்காக எடுக்கக் கூடாது. 
நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில், 6 மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொன்றையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்ததால், இந்த நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எனவே, நாடாளுமன்றத்துக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால், தேர்தல் நடத்துவதற்கான செலவும் குறையும் என்றார் மோடி.
வெட்கத்துக்குரிய செயல்: இதனிடையே, பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் கட்சி அவமானகரமான வகையில் நடந்து கொண்டதாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்தார். இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபில் முன்வைத்த வாதத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்து விட்டது. எனவே, கபில் சிபல், ஒரு வழக்குரைஞராக இல்லாமல், காங்கிரஸ் தலைமையின் ஆசிர்வாதத்துடன் அக்கட்சியைச் சேர்ந்தவராகச் செயல்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயல், அவமானகரமானது என்று அமித் ஷா அந்த சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com