ஒக்கி புயல்: மாயமான தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் கேரள முதல்வருடன் சந்திப்பு

ஒக்கி புயலின் தாக்கத்தால், நடுக்கடலில் மாயமான தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்களின் குடும்பத்தினர், கேரள முதல்வர் பினராயி விஜயனை புதன்கிழமை சந்தித்து,

ஒக்கி புயலின் தாக்கத்தால், நடுக்கடலில் மாயமான தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்களின் குடும்பத்தினர், கேரள முதல்வர் பினராயி விஜயனை புதன்கிழமை சந்தித்து, அந்த மீனவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஒக்கி புயல் காரணமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளம், லட்சத் தீவுகளிலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இப்புயலின் தாக்கத்தால் நடுக்கடலில் மாயமான தமிழகம், கேரள மீனவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், லட்சத் தீவு பகுதியிலும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், இன்னமும் பல மீனவர்களின் கதி என்ன என்பது உறுதியாகாத நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, ஒக்கி புயலால் மாயமான 19 பேரின் குடும்பத்தினர், கேரள முதல்வர் பினராயி விஜயனை புதன்கிழமை சந்தித்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என 19 மீனவர்களின் குடும்பத்தினரும் முதல்வரை சந்தித்ததாகவும், மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க உதவும்படி கோரிக்கை விடுத்தாகவும் கேரள அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கிய சில தூத்துக்குடி மீனவர்களின் சடலங்களை ஒப்படைக்க கேரள போலீஸார் மறுப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். சடலங்களைப் பெறுவதில் நிலவும் தாமதத்தை கண்டித்து, தூத்துக்குடியில் சில தினங்களுக்கு முன் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
மீட்பு நடவடிக்கை நீடிப்பு: இதனிடையே, மாயமான மீனவர்களை மீட்பதற்காக, கடற்படையின் 'ஆபரேஷன் சகாயம்' நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 கடற்படை கப்பல்கள், 4 வகையான விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், லட்சத் தீவின் கவரத்தி கடற்பகுதியில் 180 மைல் தொலைவில் ஒரு படகில் தவித்துக் கொண்டிருந்த 13 மீனவர்கள் புதன்கிழமை காலை மீட்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மினிகாய் தீவிற்கு தண்ணீர், மருந்துகள், உணவு, பெட்ரோல் உள்ளிட்டவை கப்பலில் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com