குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை திரும்பக் கேட்டு தீக்குளிப்பதாக மிரட்டிய தந்தை: தவறுதலாகத் தீப்பற்றி இறந்த பரிதாபம்!

தன்னிடம் வாக்களித்தபடி குழந்தைகளுக்கு பெரிய பள்ளியில் இடம் கிடைக்காததால், பயிற்சி மையத்திடம் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை திரும்பக் கேட்டு தீக்குளிப்பதாக மிரட்டிய தந்தை, தவறுதலாகத் தீப்பற்றி...
குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை திரும்பக் கேட்டு தீக்குளிப்பதாக மிரட்டிய தந்தை: தவறுதலாகத் தீப்பற்றி இறந்த பரிதாபம்!

பெங்களூரு: தன்னிடம் வாக்களித்தபடி குழந்தைகளுக்கு பெரிய பள்ளியில் இடம் கிடைக்காததால், பயிற்சி மையத்திடம் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை திரும்பக் கேட்டு தீக்குளிப்பதாக மிரட்டிய தந்தை, தவறுதலாகத் தீப்பற்றி இறந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.     

பெங்களூருவின் காகதஸ்புரா பகுதி லால் பகதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ரிதேஷ் குமார்(35). இவரது மனைவி பாருல் மஹேன்சரியா. இவர்களுக்கு ஏழு மற்றும் மூன்று வயதில் குழந்தைகள் உள்ளனர். ரிதேஷ் தன் குழந்தைகளை இந்திரா நகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் சேர்க்க ஆசைப்பட்டார். ஆனால் அப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க  வேண்டுமானால் அதற்கு நுழைவுத் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் இருப்பதால், அதற்கென குழந்தைகளுக்கு தனிப் பயிற்சி அளிக்க வேண்டும்.

எனவே தனது தங்கை படித்துள்ள ஆதித்யா டூட்டோரியல்ஸ் என்னும் தனிப் பயிற்சி  மையத்தில் இரு குழந்தைகளையும் ரிதேஷ்  சேர்த்தார். இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆதித்ய பஜாஜ். அதற்கென இருவருக்கும் சேர்த்து ரூ.2.5 லட்சத்தினை கட்டணமாகச் செலுத்தியுள்ளார்.  ஆனால் அந்த நிறுவனம் வாக்களித்தபடி ரிதேஷின் குழந்தைகளுக்கு அந்த பள்ளியில் இடம்பெற்றுத் தர இயலவில்லை.

எனவே கோபம் அடைந்த ரிதேஷ் உடனடியாக ஆதித்ய பஜாஜிடம் சென்று தான் செலுத்திய மொத்த பணத்தினையும் திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அவர் உடனடியாத் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார்.எனவே ஆதித்ய பஜாஜை மிரட்டினால் அவர் பணத்தினை திருப்பித் தருவார் என்று ரிதேஷ் எண்ணினார்.

எனவே கடந்த வாரம் வியாழன் அன்று ஆதித்ய பஜாஜை சந்திக்கச் சென்ற ரிதேஷ் தன்னுடைய உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு மிரட்டினார். ஆனால் எதிர்பாராத விதாமாக நெருப்பு பற்றிக் கொண்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80% க்கு மேலாக தீக்காயங்கள் ஏற்பட்டதால் மறுநாள் வெள்ளியன்று அவர் மரணமடைந்தார்.     

இதனைத் தொடர்ந்து ரிதேஷின்  மனைவி பாருல் மஹேன்சரியா அளித்த புகாரின் பேரில் ஆதித்ய பஜாஜ் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் மோசடி வழக்குகள் பதியப்பட்டு போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். ஆதித்யா இது போல நிறையப் பெற்றோரை ஏமாற்றி உள்ளதாக காவல்துறை துணை ஆணையர் சரணப்பா தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாருல், 'எனது கணவரிடம் பெற்ற பணத்தில் ரூ.1.25 லட்சத்தினை மட்டுமே ஆதித்ய பஜாஜ் திருப்பி அளித்தார். முதலில் கொஞ்சம் அவகாசம் கேட்டவர், சமீப காலமாக மிரட்டத்த துவங்கினார். ஒரு கட்டத்தில் என் கணவரிடம் 'நீ இறந்தாலும் நான் பணத்தினை திருப்பித் தரப் போவதில்லை'  என்றெல்லாம் கூறினார்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com