கேரளாவில் சம்பவம்: தம்பி என ஏமாற்றி தானே இறந்துவிட்டதாக விளம்பரம் கொடுத்த முதியவர்

முதுமையில் ஏற்பட்ட விரக்தியால் தான் இறந்துவிட்டதாக தானே விளம்பரம் கொடுத்துவிட்டு மாயமான முதியவர் மீட்கப்பட்டார்.
கேரளாவில் சம்பவம்: தம்பி என ஏமாற்றி தானே இறந்துவிட்டதாக விளம்பரம் கொடுத்த முதியவர்

கோட்டயம்: முதுமையில் ஏற்பட்ட விரக்தியால் தான் இறந்துவிட்டதாக தானே விளம்பரம் கொடுத்துவிட்டு மாயமான முதியவர் மீட்கப்பட்டார்.

ஜோசப் மேலூக்குன்னெல் என்ற 74 வயது முதியவர், கன்னூர் மாவட்டம் தலிபரம்பா என்ற பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த நவம்பர் 29ம் தேதி பிரபலமான நாளிதழ் ஒன்றில் தான் இறந்துவிட்டதாக விளம்பரம் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில், குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் கோட்டயத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பிரபல நாளிதழ் நிறுவனத்துக்குச் சென்ற ஜோசப், தனது விவரங்களையும், புகைப்படத்தையும் அளித்து இறந்துவிட்டதாக விளம்பரம் கொடுத்துள்ளார். அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், இந்த புகைப்படத்தில் இருப்பது உங்களைப் போல இருக்கிறதே என்று கேட்டதற்கு, அவர் தனது தம்பி என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதன்பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. மறுநாள் காலை, நாளிதழில் விளம்பரத்தைப் பார்த்த உறவினர்கள், ஜோசப்பின் மனைவியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் நேற்று முதல் காணாமல் போனதாகவும், காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கர்நாடகா, தமிழ்நாடு என்று பல ஊர்களுக்குச் சென்ற ஜோசப், இறுதியாக கடந்த திங்களன்று கோட்டயம் வந்துள்ளார்.

அப்போது, கோட்டயத்தில் உள்ள வேளாண்துறை வங்கிக்குச் சென்ற ஜோசப், தன் கைவசம் உள்ள தங்க செயின் மற்றும் பணத்தை தனது மனைவியிடம் சேர்ப்பிக்குமாறு வங்கி ஊழியர்களிடம் கோரியுள்ளார். இது தங்கள் வேலை இல்லை என்று ஊழியர்கள் மறுத்தும் ஜோசப் விடவில்லை. உடனடியாக வங்கி ஊழியர்கள் காவல்நிலையத்துக்கு போன் செய்துள்ளனர்.

அவர்கள் வருவதற்குள் ஜோசப் அங்கிருந்து சென்றுவிட்டதால், ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரித்து, அது காணாமல் போன ஜோசப்தான் என்று கண்டுபிடித்தனர். அக்கம் பக்கத்தில் விசாரித்து, கோட்டயத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜோசப்பை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஜோசப்பிடம் காவல்துறையினர் விசாரித்ததில், முதுமை காரணமாக சில உடல்நலப் பிரச்னைகளால் தான் அவதிப்படுவதாகவும், குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாததால் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com