சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: சிறப்புக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்

சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் தொடர்பான 241 வழக்குகளை முடித்து வைத்த விவகாரம் குறித்து சிறப்புக் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்யப் போவதாக

சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் தொடர்பான 241 வழக்குகளை முடித்து வைத்த விவகாரம் குறித்து சிறப்புக் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்யப் போவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 11-ஆம் தேதி அந்த அறிக்கைகள் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளன.
இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து கடந்த 1984-ஆம் ஆண்டு நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதில் 2,700-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இது தொடர்பாக ஏறத்தாழ 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றை விசாரிப்பதற்காக 3 நபர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
அவற்றை விசாரித்த அந்தக் குழுவானது இறுதியாக 241 வழக்குகளை முடித்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவை தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தது. இந்த நிலையில், சீக்கிய கலவரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட மனுதாரர்ரகள், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி அமைப்பால், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்புடைய 293 வழக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், அப்போது 241 வழக்குகளை முடித்துக் கொள்வதென அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், எஸ்ஐடி எடுத்த முடிவை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகள் 2 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அதுதொடர்பான அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி அந்தக் குழுவானது தனது அறிக்கையை சில நாள்களுக்கு முன்பு சமர்ப்பித்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
எஸ்ஐடியின் முடிவு தொடர்பாக சிறப்புக் குழு தாக்கல் செய்த அறிக்கையை வரும் 11-ஆம் தேதி ஆய்வுக்குட்படுத்த உள்ளோம். 
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் நீதிமன்றத்துக்குத் தேவையான உதவிகளைப் புரியமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com