அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அவரது பங்களிப்பை மறைக்கின்றன: பிரதமர் மோடி

அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள், அவர் நாட்டுக்கு அளித்த உண்மையான பங்களிப்பை மறைக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.

அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள், அவர் நாட்டுக்கு அளித்த உண்மையான பங்களிப்பை மறைக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாகக் குறிப்பிட்டு, "பலருக்கு அம்பேத்கரைவிட சிவ பெருமானின் நினைவுதான் அதிகம் வருகிறது' என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து, தில்லியிலுள்ள ஜன்பத் பகுதியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
தற்போது அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி வாக்குகள் சேகரித்து வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும், உண்மையில் இந்தியாவை நிர்மாணிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை மறைப்பதற்கான முயற்சியைத்தான் மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தாலும், அவரது கோட்பாடுகளை குழி தோண்டிப் புதைப்பதற்காக அவர்கள் இவ்வளவு முயற்சி செய்தும் அவை மறைக்க முடியாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. அவரது கருத்துகளை மக்களின் நினைவிலிருந்து ஒரு போதும் அகற்ற முடியாது.
அம்பேத்கரின் பங்களிப்பை மறைக்க முயற்சிப்பவர்களைவிட மற்றவர்களுக்குத்தான் அவரால் மிகவும் கவரப்பட்டுள்ளனர்.
அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைப்பதற்கான அடிக்கல் 1992-ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு 23 ஆண்டுகளாக அந்த மையத்தை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பலருக்கு அப்படி ஒரு திட்டம் இருந்ததே மறந்து விட்டது.
ஆனால், பாஜக ஆட்சியமைந்த பிறகு, 2015-ஆம் ஆண்டு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டு, மூன்றே ஆண்டுகளில் தற்போது அந்த மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
அவர்களுக்கு அம்பேத்கருக்கு மையம் அமைப்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்களுக்கு "பாபா சாஹேபை' விட "பாபா போலே'வின் (சிவபெருமான்) நினைவுதான் அதிகம் உள்ளது.
அம்பேத்கரின் கனவான சமூக ஜனநாயம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இருந்தாலும், இன்றைய நவீன காலகட்டத்தில் அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. சமூகத்தில் உள்ள அவலங்கள் எல்லாம் மறைந்து வருகின்றன.
தற்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச மையம் இளைஞர்களுக்கானது. 
இங்கு அவர்கள் அம்பேத்கரின் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியும்.
இந்த மையம் பெüத்த மற்றும் நவீன கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக தில்லி தவிர, மும்பை, நாகபுரி, மத்தியப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர், லண்டன் ஆகிய இடங்களில் சுற்றுலா மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com