அயோத்தி வழக்கு விவகாரம்: கபில் சிபலை காங்கிரஸிலிருந்து நீக்க வலியுறுத்தல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலை, அந்தக் கட்சியிலிருந்து நீக்க

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலை, அந்தக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் சிராஜ் மெஹதி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அயோத்தி வழக்கு விவகாரத்தில் கபில் சிபல் மேற்கொண்ட நடவடிக்கைக்காக, அவரை கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்சியை விட்டு நீக்க வேண்டும். அல்லது, தனது செயலுக்கு தார்மிகப் பொறுப்பேற்று கபில் சிபலே பதவி விலக வேண்டும். அயோத்தி வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்பதும், அது கபில் சிபலின் தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தெளிவுபடுத்தியுள்ளார்.
கட்சியின் அடுத்த தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், அயோத்தி வழக்கு தொடர்பாக கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
விரைவில் குஜராத்திலும், அடுத்த ஆண்டு ஏராளமான மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கபில் சிபலின் இந்தச் செயல் கட்சியின் வெற்றியை பாதிக்கும்.
அயோத்தி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தச் சூழலில், கபில் சிபல் உச்ச நீதிமன்றத்திடம் சொல்லியதை பொதுமக்களோ, விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களோ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றார் சிராஜ் மெஹதி.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதுவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கும்படி உச்ச நீதிமன்றத்திடம் கபில் சிபல் கோரிக்கை விடுத்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com