கலைஞர்கள் மிரட்டப்படுவது இந்தியாவுக்கே அவமானம்: உயர் நீதிமன்றம்

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் கலைஞர்களுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவது நாட்டுக்கே அவமானம் என்று மும்பை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது.
கலைஞர்கள் மிரட்டப்படுவது இந்தியாவுக்கே அவமானம்: உயர் நீதிமன்றம்

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் கலைஞர்களுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கப்படுவது நாட்டுக்கே அவமானம் என்று மும்பை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது. மேலும், "பத்மாவதி' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் அந்தப் படத்தில் கதாநாயகி நடிகை தீபிகா படுகோனேவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் ஆகியவை குறித்தும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர், கலப்புத் திருமணங்களை நடத்தி வந்த கோவிந்த் பன்சாரே ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டு பல ஆண்டுகள் கழித்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த இருவரின் குடும்பத்தினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, பாரதி டாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த நாட்டில் எவரும் தங்களது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே யாராவது, எதையாவது சொல்லிவிட்டால் பெயர் தெரியாத சிறு அமைப்புகள் கூட அதனைத் தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டுவது நாட்டுக்கு அழகல்ல.
வேறு எந்த ஜனநாயக நாட்டிலாவது கலைஞர்கள் மிரட்டப்படுவதைப் பார்க்க முடியுமா? ஏராளமான தொழிலாளர்களின் கடுமையான உழைப்புடன் ஒருவர் (சஞ்சய் லீலா பன்சாலி) ஒரு திரைப்படத்தை (பத்மாவதி) உருவாக்குகிறார். ஆனால், சிறு அமைப்புகளின் தொடர் மிரட்டல் காரணமாக அவரால் அந்தப் படத்தைத் திரையிட முடியவில்லை.
அந்தப் படத்தில் நடித்த நடிகையை (தீபிகா படுகோனே) படுகொலை செய்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஒருவர் பகிங்கிரமாக அறிவிக்கிறார். மாநில முதல்வர்கள் கூட அந்தத் திரைப்படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்.
பணபலம் மிக்க திரைத் துறையினருக்கே இந்த நிலைமை என்றால், ஏழை எளிய மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? இதுபோன்ற மிரட்டல்களை அனுமதிப்பதும் ஒரு வகையில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையே ஆகும்.
உலகிலேயே மிகப் பெரிய நாடான இந்தியாவில் இவ்வாறு கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதை பிற நாடுகள் எவ்வாறு எடுத்துக்கொள்ளும்? அன்றாடம் நடைபெறும் இதுபோன்ற மிரட்டல் சம்பவங்களால் நாம் பெருமை கொள்ள முடியுமா? இந்தச் சம்பவங்கள் இந்தியாவுக்கு மிகப் பெரிய அவமானம் ஆகும்.
வெளிநாடுகளில் குற்றம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர். ஆனால், இந்தியாவிலோ நாடாளுமன்றத் தாக்குதல், பிரதமர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகும் புலனாய்வு அமைப்புகள் படிப்பினை பெறவில்லை.
சமூக சேவகர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு சீர்திருத்தவாதி கடந்த 2015-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் முக்கியக் குற்றவாளிகள் பிடிபடவில்லை.
இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் இவ்வளவு காலம் இழுபறி நீடிப்பதை ஏற்க முடியாது. எனவே, இந்த வழக்குகளை விசாரித்து வரும் மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஆகியவை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிப்பதற்காக வழக்குரைஞர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com