குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்: விஜய் ரூபானிக்கு கடும் சவால்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி போட்டியிடும் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் அவருக்கு கடும் சவால் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்: விஜய் ரூபானிக்கு கடும் சவால்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி போட்டியிடும் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் அவருக்கு கடும் சவால் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்டு வருகிறது. கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் வரை பாஜக வேட்பாளர்களே மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர்.
குஜராத்தில் முதல்கட்டத் தேர்தல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தேர்தலில் விஜய் ரூபானியின் தொகுதியும் இடம்பெறுகிறது.
கிழக்கு ராஜ்கோட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இந்திராணீல் ராஜ்யகுரு, ரூபானியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இதனால், அந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. கர்நாடக ஆளுநராகப் பதவி வகித்துவரும் வஜுபாய் வாலா, மேற்கு ராஜ்கோட்டில் கடந்த 1985-ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் அவர் மட்டுமே அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்காக 2002-ஆம் ஆண்டில் அந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்தார் வஜுபாய் வாலா. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றார்.
அதற்கு அடுத்தத் தேர்தலில் (2007) மணிநகர் தொகுதியில் மோடி போட்டியிட்டதால், அந்தத் தொகுதியில் மீண்டும் வஜுபாய் வாலா எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தத் தொகுதியில் பாஜகவை எந்தக் கட்சியின் வேட்பாளராலும் இதுவரை வீழ்த்த முடியவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு விஜய் ரூபானி வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் வர்த்தகர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
சரக்கு-சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி), ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. மேற்கு ராஜ்கோட் தொகுதியில் மொத்தம் 3.15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பாடிதார் சமூகத்தினர் 62ஆயிரம் பேர் உள்ளனர்.
இதனிடையே, வைர வியாபாரிகளின் நகரமாகக் கருதப்படும் சூரத் தொகுதியும் பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com