கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு: 11 முன்னாள் எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், 11 முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு: 11 முன்னாள் எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், 11 முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
தனியார் தொலைக்காட்சி ஒன்று, கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி விடியோ ஒன்றை ஒளிபரப்பு செய்தது. 2 பத்திரிகையாளர்கள் நடத்திய ரகசிய விசாரணையில், அந்த விடியோ படமெடுக்கப்பட்டுள்ளது. அந்த விடியோவில் இருந்து, அப்போதைய எம்.பி.க்கள் 11 பேர், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. 
இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மக்களவை எம்.பி.க்களான 10 பேரும், மாநிலங்களவை எம்.பி. ஒருவரும் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதையடுத்து, 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி போலீஸார், கடந்த 2009-ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தில்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டோர் தொடர்ந்து, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவதால், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.பி.க்கள் ஒய்.ஜி.மகாஜன்(பாஜக), சத்திரபால் சிங் லோதா (பாஜக), அண்ணா சாகேப் எம்.கே. பாட்டீல் (பாஜக), மனோஜ் குமார் (ஆர்ஜேடி), சந்திர பிரதாப் சிங் (பாஜக), ராம் சேவாக் சிங் (காங்கிரஸ்), நரேந்திர குமார் குஷ்வாஹா (பிஎஸ்பி), பிரதீப் காந்தி (பாஜக), சுரேஷ் சந்தேல் (பாஜக), லால் சந்திர கோல் (பிஎஸ்பி), ராஜா ராம்பால் (பிஎஸ்பி) ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களைத் தவிர, ராம்பாலின் அப்போதைய உதவியாளர் ரவீந்தர் குமாருக்கு எதிராகக் குற்றச்சாட்டைப் பதிவு செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார். நடுத்தரகராகச் செயல்பட்ட விஜய் போகட் இறந்துவிட்டதால், அவருக்கு எதிரான விசாரணை கைவிடப்படுகிறது. வழக்கு விசாரணை, வரும் ஜனவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com